உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல மாநிலங்கள் தங்களது எல்லைகளை மூடியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கரோனை வைரஸ் தாக்கம் அதிகளிவில் உள்ளதால் கேரளாவை ஒட்டிய மாவட்டமான தேனியில் குமுளி, கம்பம்மெட்டு, போடிமெட்டு என மூன்று பாதைகளும் அடைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டம் ராசிங்காபுரம் கிராமத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீ, விஜயமணி, மஞ்சு, லோகேஸ் உள்ளிட்ட ஒன்பது பேர் கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஏலத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகின்றனர். மாநில எல்லை மூடப்பட்டதால் இவர்கள் அனைவரும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதை வழியாக தங்களது சொந்த ஊரான ராசிங்காபுரத்திற்கு நடைபயணமாக புறப்பட்டுள்ளனர்.
இவர்கள் வரும் பாதையில் திடீரென்று எதிர்பாராதவிதமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இதிலிருந்து தப்புவதற்காக அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அப்போது, தீயில் சிக்கியதில் ஜெயஸ்ரீ (28), கிர்த்திகா (3) என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இருவர் படுகாயம் அடைந்த நிலையில், நான்கு பேர் வனப்பகுதிக்குள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், வனத் துறையினர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்கவும், வனப்பகுதிக்குள் பதுங்கியிருக்கும் மக்களை மீட்கவும் 50க்கும் மேற்பட்டோர் மலைப்பகுதிக்குள் சென்றுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: புதியதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களில் மாவட்டக் கருவூலங்கள் அமைக்கப்படும்!