நீலகிரி மாவட்டம் குன்னுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக உணவு தேடி காட்டெருமைகள் வனப்பகுதியிலிருந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு அடிக்கடி வருவது வாடிக்கையாக உள்ளது. அதேபோல எடப்பள்ளி பகுதியில் கடந்த 21 நாள்களாக காலில் குழாய் சிக்கிய நிலையில் குடியிருப்புப் பகுதியில் காட்டெருமை உலா வந்தது. அச்சமடைந்த பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதையடுத்து கடந்த மூன்று நாள்களாக வனத்துறை சார்பில் காட்டெருமை கண்காணிக்கப்பட்டுவந்தது. இன்று உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில், முதுமலையிலிருந்து உதவிக் கால்நடை மருத்துவ அலுவலர் கோச்சாலன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி மூலமாக இரண்டு முறை மயக்க ஊசி காட்டெருமை மீது செலுத்தப்பட்டது.
நீண்ட நேரத்திற்குப் பிறகு மயக்கமடைந்த காட்டெருமைக்கு முதலுதவி செய்து, ராட்சச இயந்திரங்கள் மூலமாக லாரியில் முதுமலை வனப்பகுதிக்கு காட்டெருமை அழைத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: சீறிய மாடு - பதறிய மக்கள்- சாலையில் பதற்றம்!