நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை கடந்த 10 ஆண்டுகளாக சுற்றி வருகிறது. இந்த யானைக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையறிந்த வனத்துறையினர் கடந்த மாதம் 28ஆம் தேதி கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானைக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தபோதும், யானை குடியிருப்பு பகுதிக்குள் வருவதுடன் சாலைகளில் நிற்பதையும் வழக்கமாக கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று மாலை அந்த யானையை அடையாளம் தெரியாத சில நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அந்த யானையின் இடது காது கிழிந்ததுடன், காதின் சில பகுதிகளும் துண்டாகி கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக யானைக்கு கடுமையான ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.
முதுகில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளித்தும் சோர்வுடன் காணபட்ட யானைக்கு தற்போது காது கிழிந்து தொடர்ந்து ரத்தம் கொட்டுவதால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வனத்துறை மருத்துவ குழுவினர் காயம்பட்ட யானைக்கு முதல் கட்டமாக உணவு பொருட்களில் மருந்து வைத்து கொடுத்து வருகின்றனர்.
உயர் அலுவலர்களின் அனுமதி கிடைத்தவுடன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி, காயத்திற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் என புலிகள் காப்பக இணை இயக்குநர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மேலும் யானைக்கு எவ்வாறு காயம் ஏற்பட்டது என்பது குறித்து கண்டறியும் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், யானைக்கு ஏற்கனவே காதில் பழைய காயம் இருந்திருக்கலாம் அந்த காயங்களுடன் மூங்கில் புதர்களில் யானை தொடர்ந்து செல்வதால் காயம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.