நீலகிரி: தேயிலை விவசாயம் என்பது நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலான ஒன்று. இத்தொழிலில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்கள் விளைவிக்கும் தேயிலைக்கு உரிய விலை கோரி, விவசாயிகள் சார்பில் கடந்த பல ஆண்டுகளாகவே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இருப்பினும் இதுவரை எந்த முறையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், போராட்டங்கள் அவ்வப்பொழுது எழுந்த வண்ணமே உள்ளது. அந்த வகையில், விளைவிக்கும் தேயிலைக்கு உரிய விலை வேண்டி கடந்த செப். 1ம் தேதி முதல் அம்மாவட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தேயிலைக்கு உரிய விலை வேண்டியும், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தக் கோரியும், தேயிலை வாரியம் உடனடியாக 30 ஏ சட்டத்தை அமல்படுத்த வேண்டியும், கோரிக்கைகளை முன்வைத்து கடந்த செப்.1ம் தேதி முதல் கோத்தகிரி அருகே நட்டக்கல் பகுதியில், நாக்குபெட்டா படுகர் நல சங்க சார்பில் 10 வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் போராட்டத்திற்கு பொரங்காடு சீமை படுகர் நலச்சங்கம் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். இந்த 10 வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் பேரகணி, தாந்தநாடு, புடியங்கி, கன்னேரிமுக்கு, அளியூர், ஒடேன், உல்லத்தட்டி கிராமத்தில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்டனர்.
இது போல உதகை பகுதியில் உள்ள குருத்துளி, தங்காடு பகுதிகளிலும் போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து கிராமங்களில் உள்ள தேயிலை விவசாயிகளும், இலை பறிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கிராமத்தில் இருந்து ஊர்வலமாக வந்து, குலதெய்வமான எத்தையம்மனை வழிபட்டு கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தேயிலை வாரிய உறுப்பினர் ராஜேஷ் சந்தர் கலந்து கொண்டு, “30 ஏ என்ற பிரிவில் தற்போது தேயிலை விவசாயிகள், தேயிலை தொழிற்சாலைகள் சட்டத்தில் இணைக்கப்பட்டனர். மேலும் தேயிலை வர்த்தகர்களையும் உடனடியாக இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: "கோரிக்கை வைத்தால் காவிரி பிரச்சினை தீர்ந்துவிடாது.. பாரத் பெயர் மாற்றம் - மோடி அவசரப்படுகிறார்" - திருநாவுக்கரசர் எம்.பி!