நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவரும் கோடை விழாவின் இறுதி நாளான இன்று சுற்றுலாத் துறை சார்பாக உதகை படகு இல்லத்தில் படகுப்போட்டி நடத்தப்பட்டது.
ஆண்கள், பெண்கள், தம்பதியினர், படகு இல்ல ஊழியர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் என ஆறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இப்போட்டியை, மாவட்ட ஆட்சித் தலைவர் இன்னசென்ட் திவ்யா, மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜூணன், குன்னூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராமு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
போட்டியில் கலந்து கொண்ட சுற்றுலாப் பயணிகள் மிதிப்படகுகளை போட்டி போட்டுக்கொண்டு ஓட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
போட்டி முடிவுகள்:
ஆண்கள் இரட்டையர் பிரிவில் கோவையைச் சேர்ந்த பிரிட்டோ, ராஜ் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். அதேபோன்று, பெண்கள் இரட்டையர் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த திவ்யபாரதி, சௌமியா ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் கார்த்திக், அர்ச்சனா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். மேலும், படகு இல்ல பணியாளர்களுக்கான துடுப்பு படகு போட்டியில் வெற்றிபெற்ற போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்தப் போட்டிகளைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் உதகை படகு இல்லத்துக்கு வந்திருந்தனர்.