மலைகளின் அரசி என்றழைக்கபடும் உதகையில் தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதனால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கு வரத்தொடங்கி உள்ளனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் யுனஸ்கோவால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கபட்டுள்ள உதகை மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
ஆனால் தினந்தோறும் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை ஒரு மலை ரயிலும், குன்னூர் - உதகை இடையே 4 மலை ரயில்களும் இயக்கப்பட்டு வருவதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்த ஆண்டு கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்விதமாக இன்று முதல் உதகை – கேத்தி இடையே சிறப்பு மலை ரயில் சேவை தொடங்கபட்டுள்ளது. 132 பேர் பயணம் செய்யக்கூடிய இந்த மலை ரயில் தினந்தோறும் மூன்றுமுறை இயக்கப்படும். முதல் வகுப்பில் பயணம் செய்ய 400 ரூபாயும், இரண்டாம் வகுப்பில் பயணம் செய்ய 300 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கபடுகிறது.
இந்த மலை ரயில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுமே உதகை-கேத்தி இடையே இயக்கபட்டு வந்தது. ஆனால், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால் மே மாதம் இறுதிவரை தினந்தோறும் தொடர்ந்து இயக்க தென்னக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு சுற்றுலா பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அந்த மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் உதகை ரயில் நிலையத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.