நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா, வாழைத் தோட்டம் போன்ற பகுதிகளில் ஏராளமான ரிசார்ட்டுக்கள், காட்டேஜ்கள் உள்ளன. இவை தவிர, குடியிருப்புகள், விவசாய நிலங்களும் அதிகளவில் உள்ளன. இவற்றில் பெரும்பாலான காட்டேஜ்கள், ரிசார்ட்டுக்கள் யானை வழித்தடங்களில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானை வழித்தடங்களில் உள்ள கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டனர். இதை எதிர்த்து, யானை வழித்தடத்தில் உள்ள ரிசார்ட், காட்டேஜின் உரிமையாளர்கள் 39 பேர் உச்ச நீதிமன்றம் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இந்த அக்டோபர் 14ஆம் தேதி வெளியானது.
அதில், யானைகள் வழித்தடம் தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏற்கனவே வெளியிட்டுள்ள உத்தரவு பொருந்தும் என்றும், இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தேசிய யானைகள் பாதுகாப்பு திட்ட தொழில்நுட்பக் குழு உறுப்பினர் அஜய் தேசாய், தேசிய வன உயிரின வாரிய முன்னாள் உறுப்பினர் பரவீன் பார்கவா ஆகியோர் அடங்கிய குழு அமைத்தும் உத்தரவிட்டது. மேலும், இந்த குழு நீலகிரியில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன், கள நிலவரத்தை காண நேற்று (அக்டோபர் 28) நீலகிரி மாவட்டத்துக்கு சென்றார். மசினகுடி, பொக்காபுரம், மாவனல்லா போன்ற பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், "யானை வழித்தடம் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே ஆய்வு நடத்தி நான்கு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும். கள ஆய்வுக்கான அலுவலகம் அமைப்பது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குழுவின் வழிகாட்டுதல் குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், வழித்தடம், சட்டத்துக்குபுறம்பான கட்டடங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்படும்" என்றார்.