நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பிரசித்திப்பெற்ற மாரியம்மன் கோயில் திருவிழா ஏப்ரல் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள், அம்மன் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான நேற்று (ஏப்ரல் 29) கோத்தகிரி டானிங்டன் பகுதியிலிருந்து கேரள பாரம்பரிய பஞ்ச வாத்தியம், தாலப்பொலி, சிங்காரி மேளம், செண்டை மேளம், பல்வேறு வேடமணிந்த கலைஞர்களின் நடனத்துடன் இசைக்கருவிகள் முழங்க அலங்கார ரதங்களின் ஊர்வலம் நடைபெற்றது.
நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று ரத ஊர்வலம் மாரியம்மன் கோயிலில் முடிவடைந்தது. இதில் பக்தர்கள் கேரளாவின் பாரம்பரிய உடையணிந்து கோயிலுக்கு தாலம் ஏந்திச் சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் பாரம்பரிய இசைக் கருவிகள் முழங்க திருவீதி உலா வரும் நிகழ்ச்சியை அடுத்து, காந்தி மைதானத்தில் கண்ணைக் கவரும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டது.