நீலகிரி மாவட்டம் உதகையில் தாவரவியல் பூங்கா, படகு இல்லம் (Boat house), தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. இதில் படகு இல்லத்தில் படகு சவாரி செய்ய அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.
நீண்ட காலமாக உதகை நகரின் கழிவு நீர் படகு இல்ல ஏரியில் கலந்து வந்ததாலும், மோட்டார் படகு சவாரியாலும் தண்ணீர் அசுத்தமானதுடன் துர்நாற்றம் வீசிவந்தது, இதனால் உதகை படகு இல்ல ஏரியை தமிழ்நாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகவும் மோசமான ஏரி என மாசு கட்டுப்பாட்டு துறை தெரிவித்திருந்தது. அதனையடுத்து கழிவு நீரானது நேரடியாக கலப்பது தடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்று காரணமாக அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் கடந்த 23 நாள்களாக படகு இல்லம் மூடபட்டுள்ளது. இதனால் ஏரியில் தண்ணீரின் மாசு குறைந்து தெளிவாக காட்சியளிக்கின்றது. அத்துடன் படகு சவாரி இல்லாததில் நீர் வாழ் பறவைகள், சிட்டு குருவிகள், புறாக்கள் உள்ளிட்ட பறவை இனங்கள் சுதந்திரமாக சுற்றி வருகின்றன.
மிகவும் மாசடைந்திருந்த ஏரிநீர் ஊரடங்கால் சுத்தமாக மாறியிருப்பதற்கு உதகை நகர மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு ஓவியம்!