நீலகிரி: குன்னூர் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் லெப்டினன்ட் ஜெனரலாக இருப்பவர், எஸ்.மோகன். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள படையில், தெற்கு சூடான் நாட்டிற்காக இந்தியா சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இந்த மாத இறுதியில் ஐ.நா. படைக்குச்செல்ல உள்ள நிலையில், செய்தியாளர்களை இன்று (ஆக. 1) சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,"உலக அளவில் தகுதி வாய்ந்த ஐந்து பாதுகாப்பு கல்லூரிகளில், இந்தியாவில் உள்ள அதுவும் குறிப்பாக தமிழ்நாட்டின் வெலிங்டன் பாதுகாப்பு கல்லூரி மிகவும் சிறந்த கல்லூரி எனப்பெயர் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த கல்லூரியில் அமெரிக்கா, கென்யா, பிரிட்டன் உட்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளைச்சேர்ந்த முப்படை அலுவலர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
உலக அளவில் அமைதி திரும்ப, ஐக்கிய நாடுகள் சபை அமைத்துள்ள படையில் அதிகம் பங்கேற்பவர்கள் இந்திய வீரர்களாக உள்ளனர். உலக அமைதிக்காக இதுவரை ஐ.நா. சார்பில் பாதுகாப்புப்பணியில் 160 வீரர்கள் வரை வீரமரணமடைந்துள்ளனர்.
இந்தச்சூழலில் தெற்கு சூடானில் அந்நாட்டுப்பாதுகாப்பிற்காக, அங்கு அமைதி திரும்புவதற்காக ஐ.நா. சபை மூலம் இந்தியா சார்பில் என்னை அனுப்பி வைப்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்" என்றார்.
இதையும் படியும்: குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் நினைவு தூண் திறப்பு