வாசல்:
மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தில் மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இது உதகமண்டலம், குன்னூர் ஆகிய பொதுத் தொகுதிகளையும், கூடலூர் தனி தொகுதியையும் கொண்டுள்ளது.
தொகுதிகள் வலம்:
உதக மண்டலம்: மலைமாவட்டமான நீலகிரியின் தலைநகரில் அமைந்துள்ளது உதகை தொகுதி. நாட்டின் ஒரே மலை ரயில், பூங்காக்கள், அணைகள், பள்ளத்தாக்குகள் என சுற்றுலாத் தலங்கள் பலவற்றைக் கொண்டது இத்தொகுதி.
முக்கிய தொழில், சுற்றுலா, தேயிலை சாகுபடி, மலை காய்கறிகள் விவசாயம்.
தேயிலைக்கு இதுவரை சரியான விலை கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர் விவசாயிகள். மலைக் காய்கறிகளான கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு போன்றவற்றை விற்பனை செய்ய மேட்டுப்பாளையம் சந்தைக்கே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
இதனால் விவசாயிகளின் வருமானம் பாதிக்கப்படுவதாகவும், இதனைத் தவிர்க்க உதகையில் காய்கறி விற்பனை மையம் அமைக்க வேண்டும் எனக் காய்கறி விவசாயிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுற்றுலாவுக்கு வரும் பயணிகளுக்கான வாகன நிறுத்த வசதிகள் செய்து தரப்படாது பெரும் குறையாகவே நீடிக்கிறது.
குன்னூர்: சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, லேம்ஸ் பார்க், டால்பின் நோஸ் போன்ற முக்கிய சுற்றாலத் தலங்களையும், வெலிங்டன் பாசறை நகரத்தையும் கொண்டது குன்னூர் தொகுதி. முக்கியத் தொழில் தேயிலை சாகுபடி; அடுத்தப்படியாக கொய்மலர் விவசாயம்.
ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இத்தொகுதியின் தீர்க்கப்படாதப் பிரச்னையாக இருந்து வருவது வாகனங்கள் நிறுத்த போதிய இடவசதிகள் இல்லாமல் ஏற்படும் போக்குவரத்து நெரிசல். இங்குள்ள பேருந்து நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், பேருந்து நிலையம் செல்லும் வழியிலுள்ள ரயில்வே பாதையில் மேம்பாலம் கட்டப்பட வேண்டும் என்ற இத்தொகுதி மக்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கூடலூர் (தனி): கூடலூர், பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கிய தொகுதி இது. தொகுதிகள் மறுசீரமைப்புக்குப் பின்னர் தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. மாவட்டத்தின் மற்ற இரு தொகுதிகளைப் போல சுற்றுலாவுக்கு வாய்ப்பில்லாததால், விவசாயமே பிரதானமான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல் உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன.
இத்தொகுதி கர்நாடகா, கேரளா எல்லைப்பகுதிகளை ஒட்டிய மலைப்பகுதியில் அமைந்துள்ளதால் மனிதன் - காட்டு உயிர்கள் மோதல் இங்கு அதிகம்.இத்தொகுதியில் நிலவிவரும் முக்கியப் பிரச்னை செக் ஷன் - 17. இங்குள்ள பெரும்பாலான நிலங்கள் செக் ஷன் 17 நிலங்களாக உள்ளன.
வகைப்படுத்தப்படாத அந்த நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்வதில் சிக்கல் நிலவுகின்றன. இந்த சிக்கல்கள் தொடர்பாக, தமிழ்நாடு அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தும், அரசு இன்னும் முடிவெடுக்காமல் தாமதப்படுத்திவருகிறது.
களநிலவரம்: மாவட்டத்திலுள்ள மூன்று தொகுதிகளில், உதகையில் காங்கிரஸும், குன்னூரில் அதிமுகவும், கூடலூரில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன.மலை மாவட்டம் என்பதால் இங்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைவே. தற்போதுதான் அரசு மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் நிலவிய குடிநீர் தட்டுப்பாடு 'எமரால்டு 3' கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது என்றாலும், நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப, போக்குவரத்து வசதிகள் விரிவாக்கப்பட வேண்டும், அவசரக் கால மருத்துவ உதவிக்கு 'ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்' வசதி ஏற்படுத்தி தரப்பட வேண்டும் என்ற பிரச்னைகள் அடுத்து பொறுப்புக்கு வர இருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன் வரிசை கட்டி நிற்கின்றன.
இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டும் தொகுதிக்கான மேம்பாட்டு பணிகளைச் செய்யாததால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் உதகையில் காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற கடுமையாகப் பாடுபட வேண்டும். அதிமுக - பாஜக கூட்டணியில் உதகை தொகுதியை பாஜகவுக்கு விட்டுத் தரும்பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும்.
குன்னூரில் அதிமுகவின் சாந்தி ராமுவுக்கு இருக்கும் நல்ல பெயரால் அந்தத் தொகுதியில் மீண்டும் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் அவருக்கு வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம். திமுகவின் கோட்டையாக இருக்கிறது கூடலூர். இந்த முறை இங்கு வெற்றியை ருசித்துவிட வேண்டும் என்ற முயற்சியில் உள்ளது அதிமுக. இதனால் கூடலூரிலும் போட்டி கடுமையாகவே இருக்கும்.