நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றிரவு குன்னூர் பகுதியில் பெய்த கன மழையால் குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டும் மரங்கள் விழுந்தும் போக்குவரத்து முழுமையாக பாதிப்புக்குள்ளானது.
குன்னூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் தரைப் பாலம் உடைந்ததால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள், ஒரு பிக் அப் ஜீப் ஆற்றில் அடித்துச் செல்லபட்டது. வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
தற்போது, குன்னூர் - மேட்டுபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் மண்சரிவால் விழுந்த மரங்களை மீட்புக்குழுவினர் அகற்றி வருகின்றனர். மலை ரயில் பாதையிலும் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் இரண்டாவது நாளாக இன்றும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து வாகனங்களும் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.