தூத்துக்குடி: திருச்செந்தூர் கடற்கரையில் மூன்றாவது முறையாகக் கிடைத்த கல்வெட்டு, கான்கிரிட்டுடன் சேர்ந்துள்ளதால் அதனைத் திருப்பி போட முடியாத நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 4வது கல்வெட்டைத் திருப்பி பார்த்து பத்திரப்படுத்த வேண்டு என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். குறிப்பாக திருவிழா மற்றும் விடுமுறை தினங்களிலும், குறிப்பாகப் பௌர்ணமி தினங்களில் அதிகளவில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக திருச்செந்தூரில் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால், கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கடற்கரைக்கு பக்தர்கள் இறங்கும் படிக்கட்டுகள் தகரம் மற்றும் தடுப்பு வேலிகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த இடத்தின் வழியாக பக்தர்கள் இறங்கி நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து திருச்செந்தூரில் கடலின் அலைகள் அதிகமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே கடல் அரிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் சுமார் 4 அடி உயரம் கொண்ட கல்வெட்டு ஒன்று கரையில் தெரிகிறது. ஆனால், அந்த கல்வெட்டு உள்பக்கமாக மண் மூடிய நிலையில் உள்ளது. இந்த கல்வெட்டை கான்கிரீட் கொண்டு ஏதோ இடத்தில் நட்டுள்ளனர். ஆனால் அந்த கல்வெட்டு நாளடைவில் கீழே விழுந்து மணலில் புதைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்செந்தூர் கடலில் கரை ஒதுங்கிய கல்வெட்டு! அதில் இருந்த செய்தி தெரியுமா?
தற்போது கடல் அரிப்பு காரணமாக அந்த சிலை வெளியே தெரிகிறது. கோயில் பணியாளர்கள் இந்த கல்வெட்டை திருப்ப பல முறை முயன்றுள்ளனர். ஆனால், கான்கிரிட்டுடன் கல்வெட்டு சேர்ந்துள்ளதால் திருப்பி போட முடியாத நிலையில் உள்ளது.
ஏற்கனவே திருச்செந்தூர் கடற்கரை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்குள் 3 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதில் மாதா தீர்த்தம், பிதா தீர்த்தம், முனி தீர்த்தம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மூன்று கல்வெட்டுகளும் ஏற்கனவே திருச்செந்தூரில் இருந்த தீர்த்தக்கிணறுகள் குறித்து விளக்கும் கல்வெட்டாக இருந்துள்ளது. ஆனால், தற்போதுள்ள கல்வெட்டு திருப்பி போட முடியாத நிலையில் உள்ளது.
எனவே இந்த 4வது கல்வெட்டைத் திருப்பி பார்த்து பத்திரப்படுத்தி அது சார்ந்த திருச்செந்தூர் கோயிலைச் சுற்றியிருந்த 24 தீர்த்த கிணறுகளையும், சீர் செய்து பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.