சென்னை: தமிழர்களின் முக்கிய பண்டிகையாக பார்க்கப்படும் பொங்கலை முன்னிட்டு வரும் ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறை முன்னிட்டு மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இவ்வாறு சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம், மாதாவரம் பேருந்து நிலையத்திலிருந்து ஜனவரி 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு சுமார் 14,104 சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசின் சார்பில் இயக்கப்பட்டு வருகிறது.
இதில் கிளான்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கம் மாநகர் பேருந்து நிலையத்தில் இருந்து வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதிகளில் மட்டும் சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்ட அரசு சிறப்பு பேருந்துகளில் மட்டும் சுமார் 4,13,215 பேர் பயணம் செய்து உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூடுதலாக முன்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்காலிகமாக கூடுதல் ஏடிஎம் இயந்திரங்கள், அனைத்து நடைமேடைகள் அருகிலும் குடிநீர் வசதிகள், மருத்துவ முகாம், ஓய்வு அரைகள் மற்றும் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக பாடல், இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருவதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து வசதிகளும் சிறப்பாக உள்ளதாகவும், பேருந்துகள் அனைத்து பகுதிகளுக்கும் கிடைப்பதாகவும், சில பயணிகள் தெரிவித்த நிலையில், சில பயணிகள் சென்னையில் உள்ள பல்வேறு நகரங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு சிரமமாக இருப்பதாகவும் இதனால் பாதி பேருந்து சேவைகளை கோயம்பேட்டில் இருந்தும், பாதி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போகி பண்டிகை..சென்னை விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள் மாற்றம்! -
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னையைச் சேர்ந்த பயணி சுப்பிரமணி, “சென்னை கோயம்பேட்டில் இருந்து மாநகர் பேருந்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வருவதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருக்கிறோம். அனைவரும் அமருவதற்கு அங்கு வசதிகள் இல்லை, வயதானவர்கள் அதிகமானோர் அமர இடமில்லாமல் நின்று கொண்டிருந்தனர். கோயம்பேட்டில் இருந்த சவுகரியம் கிளாம்பாக்கத்தில் இல்லை. கிளாம்பாகத்திற்கு மெட்ரோ ரயில் தொடங்கப்பட்டால் நன்றாக இருக்கும். சில ஊர்களுக்கு அதிகமான பயணிகள் பயணிப்பதால் பேருந்துகள் அனைத்தும் நிரம்பி விடுகின்றன. எனவே கோயம்பேட்டிலிருந்து பாதி பேருந்துகளையும், கிளாம்பாகத்தில் இருந்து பாதி பேருந்துகளையும் இயக்கினால் நன்றாக இருக்கும்” என்றார்.
இதையடுத்து திருப்பூரைச் சேர்ந்த பயணி சுரேஷ் கூறுகையில், “திருப்பூர், அவிநாசி போன்ற ஒரு சில ஊர்களுக்கான பேருந்துக்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மாநகர் பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரப் பேருந்து நிலையத்திற்கு பயணிகளை ஏற்றி செல்லும் பேட்டரி வாகனங்களும் குறைவாக இருப்பதால் பயணிகள் வெகு நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிலர் குழந்தைகளையும், உடைமைகளையும் கையில் தூக்கிக்கொண்டு செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் கூடுதலாக பேட்டரி வாகனங்கள், மினி பேருந்துகள் இயக்க வேண்டும். அதேபோல் சில பகுதிகளுக்கு செல்லும் அரசு பேருந்துகளில் அதிகமாக இல்லை. இதனால், மக்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
மேலும் பெரும்பாலான பேருந்துகள் முன்பதிவு செய்யபட்ட பயணிகளுக்காக இயக்கபடுவதால் நேரடியாக வரும் பயணிகளுக்கு இருக்கைகள் இல்லாமல் அவதி அளிக்கின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சில ஏடிஎம் இயந்திரங்கள் வேலை செய்யாததால் ஏடிஎம்களில் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் பணம் எடுக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இன்று ஜனவரி.13 கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சிறப்பு பேருந்து இயக்கங்களை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்ய உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.