சென்னை: பொங்கலை விழாவை முன்னிட்டு கிராமமாக மாறிய தமிழ்நாடு சிறப்பு காவல் இரண்டாம் அணி ஆவடி மைதானத்தில், அலங்கரிக்கப்பட்ட மாதிரி கிராம கூரை வீடு, மாட்டு வண்டி, குதிரை வண்டி என அனைத்தும் கிராம சுழலை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருந்தது.
பொங்கல் பண்டிகை நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணி புரியும் நபர்கள் பொங்கலுக்கு முன்னதாகவே தங்களது அலுவலகங்களில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கலைச் சிறப்பித்து வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை ஆவடியில் உள்ள சிறப்பு காவல்படை இரண்டாம் அணி மைதானத்தில், நேற்று ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல்துறை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் முன்னிலையில், சமத்துவ பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராகத் தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் தனது மனைவியுடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்.
அப்போது, காவல் அதிகாரிகள் அவர்களுக்கு பேண்டு வாத்தியங்கள் முழங்கப் பூரண கும்ப மரியாதை செய்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து சங்கர் ஜிவால் அவரது மனைவியுடன் புது பானையில் பொங்கலிட்டு, மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை.. தி.நகரில் களைக்கட்டும் பர்ச்சேஸ்!
இந்த நிலையில், அவ்விடத்தில் கிராம சூழலை நினைவுபடுத்தும் விதமாக கூரை வீடு அமைக்கப்பட்டு, அதன் அருகே குதிரை வண்டி, மாட்டு வண்டி, மீன் தொட்டி, வயல் வெளி, கிணறு என கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அப்போது, டிஜிபி சங்கர் ஜிவால் காளை மாட்டிற்கு உணவு அளித்தும், நாற்று நட்டும், கிணற்றில் தண்ணீர் எடுத்தும், கூரை வீட்டின் உள்ளே சென்று சாமி கும்பிட்டு, கயிற்றில் கட்டிலில் அமர்ந்தும் குடும்பத்தாருடன் ரசித்து மகிழ்ந்தார்.
அதன் பின்னர், காவலர்கள் பானை உடைத்தல், கயிறு இழுத்தல், வழுக்கு மரம் ஏறுதல் என உற்சாகமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர். அதனைக் கண்டு ரசித்த சங்கர் ஜிவால், போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற நபர்களுக்கு, பரிசுகளை வழங்கி கௌரவப்படுத்தினார்.
இந்த சமத்துவ பொங்கல் கொண்டாட்டத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாரம்பரிய உடை அணிந்து, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என கோலாகலமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும், மிகுந்த பணிச்சுமைக்கு இடையே இதுபோன்ற கொண்டாட்டங்கள் சற்று ஆறுதல் அளிப்பதாகவும் தெரிவித்தனர்.