சென்னை: போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனி மூட்டம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பாடு மற்றும் வருகை என 30-க்கும் மேற்பட்ட விமானங்களின் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும், டெல்லி, பெங்களூருவிலிருந்து இன்று அதிகாலை சென்னை வர வேண்டிய 3 பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மீனம்பாக்கம், கவுல்பசார், பொழிச்சலூர், பம்மல், அனகாபுத்தூர், தரைப்பாக்கம், மணப்பாக்கம் குடியிருப்புப் பகுதிகளில் போகிப் பண்டிகையையொட்டி, பழைய பிளாஸ்டிக் கழிவுகள், டயர்கள் போன்றவற்றைத் தெருக்களில் போட்டு எரிப்பதால் கடுமையான புகை மூட்டம் ஏற்பட்டு சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகள் சூழ்ந்தன.
பனி மற்றும் புகை மூட்டத்தால் விமான சேவை பாதிப்பு:
அதுமட்டுமின்றி, பனி மூட்டமும் இருப்பதால் ஓடு பாதை தெரியாத அளவுக்கு அடர்த்தியான புகை மண்டலம் ஏற்படுகிறது. அதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஒவ்வொரு ஆண்டும் பாதிக்கப்படுவது வழக்கமாக இருந்தது வருகிறது.
அதாவது, சென்னை விமான நிலையத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு, 73 புறப்பாடு விமானங்கள், 45 வருகை விமானங்கள் மொத்தம் 118 விமான சேவைகள் போகி பண்டிகை புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டன. அதன் பின்பு ஒவ்வொரு ஆண்டும் விமான சேவைகள் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
கடந்த 2024ஆம் ஆண்டு போகி பண்டிகை புகை மூட்டம் மற்றும் பனி மூட்டம் காரணமாக, 27 வருகை விமானங்கள், 24 புறப்படு விமானங்கள், 51 விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. அந்த வகையில், இந்த ஆண்டு போகி பண்டிகையின் போதும் அதேபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்று கருதி இந்திய விமான நிலைய ஆணையம் போகி பண்டிகையான இன்று காலை சென்னைக்கு வரும் விமானங்கள் இங்கிருந்து புறப்படும் விமானங்கள் போன்றவற்றின் நேரங்களை சென்னை விமான நிலையம் மாற்றி அமைத்துள்ளது.
நேரம் மாற்றப்பட்ட மற்றும் ரத்து செய்யப்பட்ட விமானங்களின் விவரம்:
சென்னையிலிருந்து இன்று காலை துபாய், அபுதாபி, தோகா, மஸ்கட், சிங்கப்பூர், கோலாலம்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு, அந்தமான், கோவா, புனே, கொல்கத்தா உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வருகை மற்றும் புறப்பாடு விமானங்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு, அதுகுறித்து பயணிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேலும் டெல்லி மற்றும் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 3 இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. தற்போது, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து கொண்டு வருகின்றனர். புகை மற்றும் பனிமூட்டம் மேலும் அதிகமானால் சென்னைக்கு வரும் விமானங்களை வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பவும் தயார் நிலையில் ஏற்பாடுகளுடன் இருக்கின்றனர். ஆனால் இன்று காலை 6 மணி வரை சென்னை விமான நிலையத்தில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.