நீலகிரி மாவட்டம் உதகையில் மலை காய்கறிகளான கேரட், முட்டைகோஸ், உருளைகிழங்கு, பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றை விவசாயிகள் பயிரிடுவது வழக்கம். குறிப்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு உதகை அருகே உள்ள பாலாடா, நஞ்சநாடு, கப்பத்தொரை, கல்லக்கொரை, மணலாடா உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்பட்ட கேரட் ஒரு கிலோவிற்கு 40 முதல் 60 ரூபாய் வரை விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் அறுவடை செய்து வருகின்றனர்.
மேலும் தயாராக உள்ள கேரட்டை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். அவ்வாறு வாங்கும் கேரட்டை இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்யபட்டு வாகனத்தில் ஏற்றி மேட்டுப்பாளையம், மதுரை, சென்னை, திருநெல்வேலி, பெங்களுர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்கின்றனர். கடந்த ஆண்டு விலை குறைவாக இருந்த நிலையில் தற்போது விலை உயர்வால் சற்று லாபகரமாக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.