நீலகிரி மாவட்டம் உதகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடைபெற்ற மனித நேய வார விழாவை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
உதகை பிரீக்ஸ் பள்ளி உள்ளரங்கில் நடைபெற்ற இவ்விழாவில் பழங்குடியினர் பயன்படுத்திய வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இசை கருவிகள், பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த இருளர், கோத்தர், தோடர் மற்றும் பனியர் இன மக்களின் வாழ்க்கை குறிப்பு பற்றிய புகைப்படங்கள், அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்கள், அரசின் சாதனைகளை விளக்கும் காட்சிகள் உள்ளிட்டவை வைக்கப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், ‘ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பல்வேறு திட்டங்கள் அரசு மூலம் வழங்கப்பட உள்ளது. குறிப்பாக இதில் சுயதொழில் புரியும் பழங்குடியினருக்கு வங்கிக்கடன் ஏற்படுத்தி கொடுக்கப்படவுள்ளது. இந்த வார விழா இறுதி நாளில் அதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள அலுவலர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்காக ஏற்படுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள், புகைப்படங்கள் உள்ளிட்டவை பல்வேறு பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளையும் கலாசாரங்களையும் காணும் வகையில் உள்ளது’ என்றார்.
இந்நிகழ்ச்சியில் அரசுத் துறைகளைச் சார்ந்த 20க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பயன்படுத்தும் பொருட்களை காட்சிப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: ஐஸ்வர்யா இரண்டாவது முறையாக கர்ப்பம்? அபிஷேக் ட்விட்டால் பரபரப்பு