நீலகிரி மாவட்டம் குன்னூர் நகரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் அரிய வகை மரங்கள் உள்ளன. இதைக் காண ஆண்டுதோறும் கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மற்றும் இரண்டாவது சீசன் காலமான செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகை தருவார்கள்.
பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஆண்டுக்கு இருமுறை மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன. அந்த வகையில், வரும் ஏப்ரல் மே மாத கோடை சீசனில் பூத்துக் குலுங்குவதற்கு ஏதுவாக 3.10 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
இந்த மலர்களில் முதன்முறையாக பச்சை ரோஜாவை காட்சிப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிம்ஸ் பூங்காவில் அமைந்திருக்கும் மலர் நர்சரி பண்ணையில், ஓட்டு முறையில் பச்சை ரோஜா நாற்று தயார்படுத்தப்பட்டது.
அதில் 10க்கும் மேற்பட்ட செடிகளில் பச்சை ரோஜா பூத்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் வித்தியாசமாகவும், அழகான தோற்றத்திலும் இருக்கும் பச்சை ரோஜா சுற்றுலா பயணிகளின் வெகுவாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: கொடுமணல் அகழ்வாராய்ச்சியில் பழங்கால பொருள்கள் கண்டுபிடிப்பு