நீலகிரி: உதகை அருகேவுள்ள கல்லட்டி மலைப்பகுதி மற்றும் வாழைத்தோட்டம் சுற்று வட்டாரப்பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழையால் வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அப்போது அந்த ஆற்றைக் கடக்க முயன்ற யானைக்கூட்டத்தில் இருந்த, பிறந்து சில மாதங்களே ஆன ஆண் குட்டி யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. அந்த குட்டி யானை மாவனல்லா பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில், அதனை மீட்ட சிங்காரா வனத்துறையினர் கடந்த மூன்று நாள்களாக தாய் யானையுடன் சேர்க்க இரவும் பகலுமாக தேடி வந்தனர்.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் தலைமையில் 8 குழுக்களாகப் பிரிந்து மசினகுடி, சிங்காரா, சீகூர் வனப்பகுதிகளில் தீவிரமாகத்தேடிய நிலையில் நேற்று மாலை சீகூர் வனப்பகுதியில் உள்ள காங்கிரஸ்மட்டம் வனப் பகுதியில் தாய் யானை இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதனையடுத்து குட்டியை அங்கு கொண்டு சென்ற வனத்துறையினர் தாயின் அருகே விட்டனர். அப்போது குட்டியை பார்த்து வேகமாக வந்த தாய் யானை குட்டியை வனப்பகுதிக்குள் அழைத்துச்சென்றது. இதனால் சுமார் 65 மணி நேரத்திற்கு மேலாகப் பிரிந்த தாயும், குட்டியும் ஒன்றாக இணைந்தது வனத்துறையினரை மகிழ்ச்சியடையச் செய்தது.
இதனிடையே நேற்றிரவு (ஆக. 31) தாய் மற்றும் குட்டியைக் கண்காணிக்க முடியாத வனத்துறையினர் இன்று காலை ட்ரோன் மூலம் தேடியதில் தாய் உள்ளிட்ட 2 பெண் யானைகளுடன் குட்டி யானை நன்றாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையும் படிங்க: அச்சன்கோவிலில் காட்டு யானை மிதித்து ஒருவர் உயிரிழப்பு