நீலகிரி: உதகையின் முக்கியச் சுற்றுலாத் தலமாக விளங்குவது உதகைப் படகு இல்லம். இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மிதிப் படகு, மோட்டார் படகு, துடுப்புப் படகு என வாடகைக்கு எடுத்து அரை மணி நேரம், ஒரு மணி நேரம் எனப் படகு இல்லத்தை படகில் சுற்றி மகிழ்ந்து செல்வார்கள்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் இங்குப் பயணிகளுக்காக இயக்கப்பட்டுவருகின்றன. இதில் மிதிப் படகில் சுற்றுலாப் பயணிகளே எடுத்துச் செல்லலாம். ஆனால் துடுப்புப் படகு, மோட்டார் படகுகளைப் படகு ஓட்டுநர்கள்தாம் இயக்க முடியும்.
மேலாளர் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
இந்தப் படகுகளை இயக்க 60-க்கும் மேற்பட்ட படகு ஓட்டுநர்கள் இங்குத் தற்காலிகப் பணியாளர்களாகப் பணியாற்றிவருகின்றனர். நேற்று மாலை படகு இல்ல மேலாளர் தற்காலிக ஊழியரைத் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை படகு இல்லத்தில் ஒன்றுகூடிய படகு ஓட்டுநர்கள் மேலாளர் தகாத வார்த்தையைப் பேசியதைக் கண்டித்து துடுப்புப் படகு, மோட்டார் படகுகளை இயக்காமல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டம் நீடிக்கிறது.
மேலாளர் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது இனி மேல் ஓட்டுநர்களைத் தரக்குறைவாகப் பேச மாட்டேன் எனக் கடிதம் வாயிலாகத் தெரிவிக்க வேண்டும். அதுவரை படகுகளை இயக்கப் போவதில்லை எனப் படகு ஓட்டுநர்கள் தெரிவித்துள்ளனர். படகுகள் இயக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - அண்ணாமலை குற்றச்சாட்டு