புதுடெல்லி: 1976ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சோசலிசம், மதசார்பற்ற தன்மை, ஒருமைப்பாடு ஆகிய வார்த்தைகள் இணைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை முன்னாள் எம்பி சுப்பிரமணியன் சுவாமி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் அரசியல் சட்டத்தின் முகவுரையில் இடம் பெற்றிருக்கும் சோசலிசம், மதசார்பற்ற தன்மை, ஒருமைப்பாடு ஆகிய வார்ததைகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இந்த மனுக்கள் மீது கடந்த 22ஆம் தேதி விசாரணை மேற்கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பான மனுக்களை விரிவாக விசாரிக்க தேவையில்லை என்று கூறியது.
சோசலிசம், மதசார்பற்ற தன்மை ஆகிய வார்த்தைகள் சட்டத் திருத்தம் மூலமாக 1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. 1949ஆம் ஆண்டு அரசியல் சட்டம் ஏற்கப்பட்டதுடன் இவை எந்தவித வித்தியாசத்தையும் கொண்டிருக்கவில்லை. பின்னோக்கிய வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அனைத்து திருத்தங்களுக்கும் பொருந்தும் என்று தலைமை நீதிபதி கூறினார்.
எமர்ஜென்சி காலகட்டத்தின்போது நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டது சட்ட முக்கியத்துவம் இல்லாத ஒன்று என்று சொல்ல முடியாது என கடந்த 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கூறியது. 1976ஆம் ஆண்டு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு சோசலிசம், மதசார்பற்ற தன்மை, ஒருமைப்பாடு ஆகியவை முகவுரையில் சேர்க்கப்பட்டது நீதித்துறையின் மதிப்புரைகளைக் கடந்து சென்று விட்டது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. டெல்டா மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை!
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் கடந்த 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி முதல் 1977ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி வரை இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அப்பொழுது 1976ஆம் ஆண்டு இந்திரா காந்தி அரசால் அரசியல் சட்டத்தில் 42ஆவது திருததம் மேற்கொள்ளப்பட்டு அதன் முகவுரையில் சோசலிசம், மதசார்பற்ற தன்மை, ஒருமைப்பாடு ஆகிய வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. இதன் மூலம் அரசியல் சட்ட முகவுரையில் இருந்த இறையாண்மை, ஜனநாயக குடியரசு என்பது இறையாண்மை, சோசலிசம், மதசார்பற்ற தன்மை, ஜனநாயக குடியரசு என்று மாற்றப்பட்டது.
இந்த விவாதத்தின் போது கருத்துத் தெரிவித்த தலைமை நீதிபதி, "திருததம் மேற்கொள்ளப்பட்ட (42ஆவது திருத்தம்)பொருளானது, இந்த நீதிமன்றத்தின் சில ஆய்வுகளின் வரம்புக்கு உட்பட்டதாகும். இதில் நாடாளுமன்றம் தலையிட்டிருக்கிறது. அந்த காலகட்டத்தில் (அவசர நிலை பிரகடனத்தின்போது) நாடாளுமன்றம் என்னவெல்லாம் செய்ததோ, அவையெல்லாம் சட்ட முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று நாங்கள் சொல்ல முடியாது," என்று கூறினார்.
சோசலிசம் என்ற வார்த்தைக்கு இந்தியாவில் பொருள் கொள்வதை விடவும் பிற நாடுகளில் வித்தியாசமாக பொருள் கொள்ளப்படுகிறது. இந்திய பொருளில், சோசலிசம் என்பது பொதுநலன் அரசு என்பதாகும். "தனியார் துறையை ஒருபோதும் இது தடுப்பத்தில்லை. தனியார் துறை வளம் பெற்று வருகிறது. அதில் இருந்து நாம் எல்லோரும் பலன் பெற்றுள்ளோம்," என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. 1994ஆம் ஆண்டு எஸ்.ஆர். பொம்மை வழக்கில் அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாக சோசலிசம் உள்ளது என உச்ச நீதிமன்றம் கூறியதையும் இப்போது நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்