நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை மறித்து தனியார் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளதாக 2008ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இதனை விசாரித்த உயர் நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அதில் பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் முறையாக அனுமதி பெறாமல் இயங்கிவந்த 37 தங்கும் விடுதிகளுக்குச் சீல்வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 37 தனியார் தங்கும் விடுதிகளுக்குச் சீல்வைக்கப்பட்டுள்ளது.
அதற்கு தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருவதாலும், யானைகள் வழித்தடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் ஏராளமான விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளதாலும் ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதபதி வெங்கட்ராமன் தலைமையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
அந்தக் குழுவில் தேசிய யானைகள் பாதுகாப்பு திட்ட தொழில்நுட்பக்குழு உறுப்பினர் அஜய் தேசாய், தேசிய வன உயிரின வாரிய முன்னாள் உறுப்பினர் பரவீன் பார்கவா ஆகிய மூவர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
இந்தக் குழு யானைகள் வழித்தடத்தில் நேரில் ஆய்வுசெய்து அறிக்கையைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டது. இக்குழு இன்று பொக்காபுரம், வாழைத்தோட்டம் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. பொக்காபுரம் விபூதிமலை பகுதிக்குச் சென்ற ஆய்வுக் குழுவினர், யானைகள் வழித்தடம் குறித்து வனத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
அப்போது ஓய்வு பெற்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''யானை வழித்தடம் தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படியே ஆய்வு மேற்கொண்டுள்ளோம். நான்கு மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தங்களது மனுக்களை அளித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம்'' என்றார்.
இதையும் படிங்க: 'கஸ்டடி மரணங்களை மறைத்து தமிழ்நாடு காவல்துறையின் பெருமையை சீர்குலைக்க வேண்டாம்' - ஸ்டாலின்