தஞ்சாவூர்: ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமம் நடத்தும் மாபெரும் 3வது உலக சாதனை நிகழ்ச்சி (spot light world record attempt) நேற்று (செப்.10) நடைபெற்றது. இதில், 500 நடன கலைஞர்கள் 46 நிமிடம் தொடர்ந்து பெருமாள் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி சாதனை படைத்தனர்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே அம்மாசத்திரத்தில் அமைந்துள்ள மகரிஷி வித்யாமந்திர் பள்ளி வளாகத்தில், ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமம் நடத்தும் மாபெரும் 3வது உலக சாதனை நிகழ்ச்சி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை க.அன்பழகன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில், ‘திருவேங்கட முடையானுக்கு சமர்ப்பனம்’ எனும் தலைப்பில், திருமலை திருப்பதி வெங்கடாசலபதி சுவாமியை போற்றி 10 பாடல்கள் பாடப்பட்டன. அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சியில் வயது வரம்பு பாராமல் 7 வயது முதல் 56 வயதுடையோர் பங்கேற்று, 46 நிமிடங்கள் இடைவிடாது, தொடர்ந்து பாடலுக்கு பரதநாட்டியம் ஆடி, ஸ்பாட் லைட் வேல்டு ரெக்காட்ஸ் வாயிலாக புதிய சாதனையை படைத்தனர்.
இதையும் படிங்க: வி.கே.குருசாமி தாக்குதல் வழக்கு: மதுரையில் ஒருவரை கைது செய்த பெங்களூரு போலீசார்!
மேலும், இந்நிகழ்விற்காக பரத நாட்டிய மாணவியர்கள் பெங்களூரு, தர்மபுரி, காரைக்கால், தூத்துக்குடி என பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம் நடத்தும் மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பரத நாட்டிய மாணவிகள் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஆடையை அணிந்து வண்ணமயமாக நடனமாடினர்.
இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர் சாந்தி சர்வோத்தமன், பள்ளி முதல்வர் ஸ்ரீதேவி, திமுக பொதுக்குழு உறுப்பினர் எல். இராஜேந்திரன், ஸ்பாட் லைட் வேல்டு ரெக்காட்ஸ் சி.இ.ஓ ஆர்.எச் மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சாதனை படைத்த மாணவிகளுக்கு பட்டத்தையும் பரிசுகளையும் வழங்கினர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத் தேர்தலில் பாமக தருமபுரியில் போட்டியிடும் - அன்புமணி ராமதாஸ்!