தஞ்சாவூர்: கடந்த 2016ஆம் ஆண்டு பட்டா பெயர் மாற்றம் செய்ய, 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற, கண்டிதம்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவிற்கு, 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும், கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்ரியா இன்று (ஜன. 18) தீர்ப்பளித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கண்டிதம்பேட்டையை சேர்ந்த சந்திரபாபு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தனது நிலத்தின் பட்டாவிற்குப் பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்த போது, அப்போதைய கிராம நிர்வாக அலுவலர் சங்கீதா (வயது 43) இதற்காக 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனை வழங்க விருப்பம் இல்லாத சந்திரபாபு, இது குறித்து, தஞ்சை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகார் செய்ததைத் தொடர்ந்து, துறை அலுவலர்கள் அளித்த ரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை சங்கீதா பெற்ற போது, அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு, கும்பகோணம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது, இவ்வழக்கில் அரசு தரப்பில் முகமது இஸ்மாயில் ஆஜரானார், விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி சண்முகப்பரியா இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், "லஞ்சம் பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்கீதாவிற்கு, ஊழல் தடுப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்ததுடன், பிரிவு 13 (1) டி. ஆர். டபுள்யூ 13 (2) கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கினார்.
இந்த சிறைத் தண்டனைகளை ஒரே சமயத்தில் அனுபவிக்க உத்தரவிட்டதுடன், அபராதம் செலுத்தத் தவறினால் மேலும், 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும்" என்று உத்தரவிட்டார். இவ்வழக்கை காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் அய்யப்பன் ஆகியோர் திறம்பட நடத்தி குற்றவாளி சங்கீதாவிற்குச் சிறைத் தண்டனை பெற்றுத் தந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 70% இயற்கை வளங்களை அளித்து விட்டோம்: மதுரை பாலம் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கருத்து..!