கும்பகோணம்: தாராசுரம் நேரு அண்ணா காய், கனி, இலை வியாபாரிகள் நல அறக்கட்டளை மூலம் நிதியாண்டு 2023-24ஆம் ஆண்டிற்கு கடை ஒன்றுக்கு ரூபாய் 6 லட்சத்திற்கும் அதிகமான தொகைக்கு வியாபாரிகளை கலந்து ஆலோசிக்காமல் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2021-22ஆம் ஆண்டு மற்றும் 2022-23ஆம் நிதியாண்டுகளை விட, இதன்மூலம் மொத்தம் 2 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதலாக டெண்டர் எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் 2022-23ஆம் ஆண்டில் ஒரு ஆண்டிற்கான வாடகையாக 383 தரைக்கடை வியாபாரிகளும் தலா ரூபாய் 70 ஆயிரம் ஒப்பந்ததாரர்களிடம் பணம் செலுத்தியுள்ளனர். தற்போது 383 தரைக்கடை வியாபாரிகளிடமும் ஆண்டு வாடகையாக தலா ரூபாய் 80 ஆயிரம் உடனே செலுத்த வேண்டும் என்று ஒப்பந்ததாரர்கள் கட்டாயப்படுத்துகிறார்கள்.
இந்த நிலையில், சில்லறை வியாபாரம் செய்து வரும் தரைக்கடை வியாபாரிகள் 383 பேரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் வியாபாரிகள் ஒப்பந்ததாரர்கள் நிர்பந்திக்கும் தொகையினை தங்களால் கொடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆகவே, மாநகராட்சியால் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட தொகையினை 383 தரைக்கடை வியாபாரிகளும் மாநகராட்சியில் நேரடியாக தினமும் வாடகையாக செலுத்தத் தயாராக உள்ளதாக கூறுகின்றனர்.
இதன் அடிப்படையில், 2023-24ஆம் ஆண்டிற்கான டெண்டரை மாநகராட்சி நிர்வாகம் ரத்துசெய்து விட்டு நடப்பாண்டிற்கான வாடகையினை மாநகராட்சி நிர்வாகமே நேரடியாக வசூலித்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, நேரு அண்ணா காய்கறி மார்க்கெட் ஏஐடியுசி சில்லறை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணிகளை நிரந்தரம் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியும், தூய்மைப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யக் கூடாது என்று வலியுறுத்தியும் கோரிக்கை முழக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் இணைந்து தங்களது கோரிக்கை குறித்த மனுவினை மாநகராட்சி நிர்வாகத்திடம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் காதல்.. காதலனை மணக்க 6வயது மகளுடன் ஜார்கண்ட் வந்த போலந்து பெண்!