தஞ்சாவூர்: திருவையாறு அருகே காவிரி, குடமுருட்டி ஆற்றின் இடையில் அமைந்துள்ள மேலஉத்தமநல்லூர் கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தீ மிதித் திருவிழா மற்றும் மகாபாரத கதை உபன்யாசம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த 20ம் தேதி தொடங்கியது. அர்ச்சுனன் தபசு வீதி உலா காட்சி, பெண்கள் பறைஇசை நிகழ்ச்சியுடன் திருவிழா துவங்கியது. திருவிழாவில் மறுநாள் காளியாட்டம், வாண வேடிக்கை, அம்பாள் வீதியுலா போன்றவை நடைபெற்றது. தொடர்ந்து 22ம் தேதி இரவு அன்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சக்தி கரகம் புறப்பாடு, அக்னி சட்டி புறப்பாடு, பால்குடம் புறப்பாடு நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் கேரள செண்டை மேளம் முழங்க அக்னி குண்டம் நோக்கி புறப்பட்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள திடலில் உருவாக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்த விழாவிற்காக இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விழாவிற்கான பத்திரிகையினை ஏற்பாடு செய்து, திருவிழாவின்போது திருமண நிகழ்ச்சி போல, நேரில் சென்று கொடுத்து அழைப்பது வழக்கம்.
மேலும் கோவில் விழாவிற்கு முன்பாக இந்த ஊரைச் சேர்ந்தவர்கள் தங்களது வீடுகளை சுத்தம் செய்து வெள்ளையடிப்பதும், கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் முன்பும் கீற்று கொட்டகைகள் அமைத்து, அதில் வரிசையாக இளநீர், நுங்கு, பலாப்பழம், மாங்காய் உள்பட பல்வேறு தோரணங்கள் கட்டி வீட்டை அழகுபடுத்தி இருந்தனர்.
மேலும் வீடுகள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை கட்டியிருப்பதும், நிகழ்ச்சியில் கண்கொள்ளாத காட்சியாகவும், வெளியூர்களில் இருந்து வருகை புரிந்திருந்த அனைவரையும் வியப்படைய செய்யும் வண்ணம் அமைந்திருந்தது.
மேலும் பஞ்ச பாண்டவர்கள் உலா வந்த நிகழ்ச்சியும், பஞ்ச பாண்டவர்களில் ஒருவர் யானையின் மீது அமர்ந்து கொண்டு காசுகளை பக்தர்களின் மீது அள்ளி வீசியும், அதை பக்தர்கள் பரவசத்தோடு எடுத்துக் கொண்ட காட்சியும், குதிரையின் நாட்டிய நிகழ்ச்சியும் அரங்கேறியது.
இசைக் கருவிகள் முழங்க நடைபெற்ற திரௌபதி அம்மன் கோயில் தீமிதித் திருவிழாவை ஊர் பொதுமக்கள் விழாக்கோலம் பூண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து விருந்தினர்கள் வந்திருந்து இதில் கலந்து கொண்டு விழாவினை ரசித்தனர். இந்த விழா இன்று (மே 23) தருமர் பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்று மஞ்சள் நீராடுதலுடன் நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம நாட்டாமை, பஞ்சாயத்துகாரர்கள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.