கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகள் கனிமொழி (25) தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராகப் பணிபுரிந்துவந்தார். இந்நிலையில், பிப்.27 ஆம் தேதியன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக அலுவலகம் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த கனிமொழி, தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனையடுத்து கனிமொழியின் பெற்றோர், உறவினர்கள் கனிமொழியின் உறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு அரசு உறுப்பு மாற்று விதிமுறைகள், வழிகாட்டுதலின்படி கனிமொழியின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
ஒரு சிறுநீரகம் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் திருச்சி தனியார் மருத்துவமனைக்கும், கல்லீரல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இருதய வால்வு, நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், அவரது கண்கள் தஞ்சை அரசு பொது மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
கனிமொழியின் உறுப்புகள் தானத்தின் மூலம் ஏழு நபர்கள் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த உறுப்புகள் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையிலிருந்து தானமாகப் பெறப்பட்டு மிக விரைவாக திருச்சி விமான நிலையம் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு காவல் துறையினர் துரிதமாகச் செயல்பட்டனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து சரிந்துவரும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை!