தஞ்சாவூர்: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து போக்குவரத்து துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் தஞ்சாவூரில் இன்று போக்குவரத்து போலீசார் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து புத்தாண்டு 2024 தினத்தை முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (ஜன.1) தஞ்சை ராஜராஜ சோழன் சிலை சிக்னல் அருகில் நடைபெற்றது.
இதில் ஹெல்மெட் அணியாமல் வந்த நபர்களுக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், ஹெல்மெட் பாதுகாப்பு அறிவுரைகளை கூறி சந்தனம் கொடுத்து இனிப்பு வகையான அல்வாவை கொடுத்தார். அதே போல் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அல்வா கொடுத்து உற்சாகப்படுத்தினார். இதில் போக்குவரத்து போலீசார் ரமேஷ், ஜோதி தொண்டு நிறுவன செயலாளர் பிரபுராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் மாவட்ட காவல்துறை சிறப்பு பிரிவு (Special Branch) சார்பில் அளித்துள்ள அறிக்கையில், தஞ்சை மாவட்டத்தில் 2023ஆம் வருடம் புலன் விசாரணை நிலுவையில் உள்ள வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எடுக்கப்பட்ட தொடர் தீவிர நடவடிக்கையின் காரணமாக இந்த வருடம் மட்டும் மொத்தம் 27 ஆயிரம் வழக்குகளில் குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 2023இல் அறிமுகப்படுத்தப்பட்ட இ - ஃபைலிங் முறையிலான நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யும் முறையில் 2023ஆம் ஆண்டு மட்டும் 6500 வழக்குகளில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 32 ஆயிரம் வழக்குகள் புலன் விசாரணையில் இருந்த நிலையில் தற்போது 19 ஆயிரம் வழக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது என்றும், பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தின்படி பதியப்பட்ட வழக்குகளில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு 44 வழக்குகளில் மொத்தம் 49 குற்றவாளிகளுக்கு நீதிமன்றத்தால் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அளவில் அதிக தண்டனை பெற்றதில் ஒன்றாகும், காவல்துறையினரின் தொடர் குற்றத்தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு கொலை குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 51 கொலை குற்றங்கள் பதிவாகியுள்ளது.
இது கடந்த ஆண்டை விட 23 சதவீதம் குறைவாகும். 70 குற்றவாளிகளின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, 263 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024 புத்தாண்டு கொண்டாட்டம்: தஞ்சை ஒப்பிலியப்பன் கோயிலில் குவியும் பக்தர்கள்.. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்!