தஞ்சாவூர்: கடந்த 1996ஆம் ஆண்டு சாகித்திய அகாதமியில் ‘பாஷா சம்மான்’ என்ற விருது நிறுவப்பட்டது. இந்த விருது குறிப்பிட்ட மொழிகளின் பரவல், நவீனமயமாக்கல் அல்லது செழுமைப்படுத்துவதில் நல்ல பங்களிப்பை செய்த எழுத்தாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், கலைஞர்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
படைப்பிலக்கிய சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுவது போன்று, பாஷா சம்மான் விருதுக்கும் 1 லட்சம் ரூபாய் விருதுத் தொகையாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளைச் சேர்ந்த 4 அறிஞர்களுக்கு பாஷா சம்மான் விருது வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் அருளானந்த நகரைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் அ.தட்சிணாமூர்த்தி என்பவரை, குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்ட மூவர் கொண்ட நடுவர் குழுவினர் 2019ஆம் ஆண்டுக்கான பாஷா சம்மான் விருதுக்குத் தேர்வு செய்தனர்.
இந்த விருது டெல்லியில் கடந்த மார்ச்சில் நடைபெற்ற சாகித்திய அகாதமி விருது வழங்கும் விழாவில் வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால், பேராசிரியர் தட்சிணாமூர்த்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவரால் நேரில் டெல்லிக்கு சென்று விருதை பெற முடியவில்லை.
இதனையடுத்து இந்த விருதை சாகித்திய அகாதமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அறவேந்தன் மற்றும் ஆலோசனைக் குழு உறுப்பினர் பேராசிரியர் அலிபாவா உள்ளிட்டோர் கடந்த 7ஆம் தேதி தட்சிணாமூர்த்தியின் இல்லத்துக்கு நேரில் சென்று, அவருக்கு சாகித்திய அகாதமியின் பாஷா சம்மான் விருதை வழங்கி பாராட்டினர். அப்போது, சாகித்திய அகாதமி செயலர் முனைவர் சீனிவாசராவ் டெல்லியில் இருந்து செல்போன் மூலம் தட்சிணாமூர்த்தியைத் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார்.
யார் இந்த தமிழறிஞர் அ.தட்சிணாமூர்த்தி? திருவாரூர் மாவட்டம் நெடுவாக்கோட்டை கிராமத்தில், கடந்த 1938ஆம் ஆண்டு ராஜம்மாள் - அய்யாசாமி தம்பதியினருக்கு மகனாக பிறந்த தட்சிணாமூர்த்தி, தமிழ் புலவராக தனது பணியை தொடங்கினார். பின்னர், பூண்டி புஷ்பம் கல்லூரியில் தமிழ் பேராசிரியாக பணியாற்றிய அவர், மதுரை தமிழ் சங்கம் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.
சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களை ஆங்கிலம் உள்பட பிற மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்துள்ளார். தமிழ் மொழிக்கு தொண்டாற்றி வரும் தமிழறிஞர் தட்சிணாமூர்த்திக்கு மொழி அறிஞருக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதாக, சாகித்திய அகாதமி மூவர் கொண்ட விருது குழுவினர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழிக்கு தொண்டு ஆற்றியதற்காக சாகித்ய அகாதமியின் பாஷா சம்மன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது குறித்து தமிழறிஞர் தட்சிணாமூர்த்தி கூறுகையில், "இந்திய அளவிலேயே அனைவராலும் பாராட்டப்படக் கூடிய அளவில் மிகப்பெரிய பேறு ஆகவும், எல்லோருக்கும் சாதாரணமாக கிடைக்கக் கூடிய விருது அல்ல இது. தனித்தன்மை வாய்ந்தது என்பதை எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். அதிலும், விவசாய குடும்பத்தில் பிறந்த எளிய மனிதனான எனக்கு இந்தியாவிலேயே அனைவரும் பாராட்டக் கூடிய அளவிற்கு மிகப்பெரிய பெருமையை சாகித்திய அகாதமி எனக்கு வழங்கி இருக்கிறது. இதனை என் வாழ்க்கையில் பெற்ற பேறு ஆக கருதுகிறேன். இந்த விருது பெறுவதற்காக தனியாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அது தானாக தேடி வந்திருக்கிறது. அது தமிழின் பெருமை. இதனை தமிழருடைய பெருமையாக கருதுகிறேன். என்னுடைய தகுதி என்பதை விட, தமிழின் தகுதிதான் இதற்கு இந்த பெருமையை சேர்த்திருக்கிறது. இது எனக்கு மிகப் பெரிய ஆறுதலாகவும், பெருமையாகவும் இருக்கிறது" என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் காமராசு, பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை முன்னாள் தலைவர் மதிவாணன், ந.மு.வே.நாட்டார் திருவருள் கல்லூரி ஆட்சிக் குழுத் தலைவர் இளமுருகன், முனைவர் சுப்பராயலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'ஒருவன் வெற்றிபெற்றால் தன் திறமை.. தோல்வியடைந்தால் கடவுளின் தவறா?' - கோபுர அடிக்கல் நாட்டுவிழாவில் கேசிஆர்