தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள நாடியம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் ஆடி மாதந்தோறும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா நடைபெறும். இந்தக் கோயில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் கலை நிகழ்ச்சிகள் அதாவது ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்தப்படும்.
இந்நிலையில் தற்போது மழை ஏதுமில்லாமல் நீர்நிலைகள் வறண்டுபோய் காணப்படுவதால் விவசாயம் செய்ய முடியாமல் போனது. இதையடுத்து தற்போது இந்தாண்டு திருவிழா தொடங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள், ஆடல் பாடல் ஆகியவற்றுக்கு ஆகும் செலவைத் திரட்டி நாடியம் பகுதியிலுள்ள அத்தனை ஏரி குளங்களை தூர்வாருவது என கிராமத்தினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை வருகின்ற பத்தாம் தேதி முதல் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.