தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்கு விரைந்து சட்டரீதியாக தீர்வு காணும் வகையில், தஞ்சை, பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் மாவட்ட காவல்துறை சார்பில் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தஞ்சையில் மருத்துவ கல்லூரி காவல் சரகத்திற்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்ற முகாமில் அம்மாவட்ட எஸ்பி மகேஸ்வரன், பொது மக்களிடம் இருந்து நேரடியாக மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார்.
அப்போது பேட்டியளித்த அவர், 'ஏற்கெனவே கடந்த மூன்றாம் தேதி முதல் குற்ற சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தும் முகாம் தொடங்கியது. பாதிக்கப்பட்ட நபரும், குற்றம்சாட்டப்பட்ட நபரும் ஒரே இடத்தில் இருக்கும்போது விசாரணை நடத்தினால்தான் சரியான தீர்வு ஏற்படும் என்பதால் குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரிக்கும் வகையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது.
தற்பொழுது கரோனா காலத்தில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் தஞ்சை மாவட்டத்தில் மூன்று இடங்களில் காவல்துறையிடம் மக்கள் நேரடியாக மனு கொடுக்கும் முகாம் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு முகாமிலும் 100 நபர்களுக்கு மேல் வரும் பட்சத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையோ இந்த முகாமினை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது' என்று கூறினார்.