தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி(Smart City) திட்டத்தின் கீழ் ஆதாம் கால்வாய் பாலம் ரூபாய் 6 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சை கீழவாசல், பெரிய சாலை ரோடு பகுதியில் 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் தரைப்பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலம் கட்டப்பட்டு 18 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில் தனியார் மணல் லாரி ஒன்று 18 டன் மணலை ஏற்றிக்கொண்டு அந்த பாலத்தின் வழியே சென்றுள்ளது. அப்போது அந்தப் பாலம் சேதமடைந்து லாரி விபத்துக்குள்ளானது. தரமற்ற முறையில் பாலம் கட்டியதால் தான் லாரி கடந்து செல்லும் போது பாலம் சேதமடைந்ததாக கூறப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்ததும் மேயர் ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மேயர் ராமநாதன் "பெரிய சாலை ரோடு பகுதியில் தரைப் பாலம் கட்டப்பட்டு 18 நாட்களே நிறைவடைந்துள்ளது. கனரக வாகனங்கள் அந்த பாலத்தில் தற்காலிகமாக செல்லக்கூடாது என்று அறிவுறுத்திய நிலையில், அதனை மீறி மணல் லாரி டிரைவர் தடுப்புகளை எடுத்து வைத்து விட்டு அந்த பாலத்தில் லாரியை ஓட்டி சென்றுள்ளார்.
இந்த மணல் லாரியில் 18 டன் மணல் இருந்துள்ளதால் அதிக பாரம் தாங்காமல் லாரி கவிழ்ந்து பாலம் சேதமடைந்துள்ளது. இதுகுறித்து லாரி உரிமையாளர், தான் தவறு செய்ததை ஒப்புக் கொண்டதாகவும், அந்த பாலத்திற்கான செலவை தான் ஏற்றுக் கொள்வதாகவும் கடிதம் எழுதி தந்துள்ளதாக தெரிவித்தார். மேலும் லாரி உரிமையாளர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும மேயர் ராமநாதன் தெரிவித்தார்.
இதனிடையே மாநகராட்சி செய்த தரமற்ற பணிகளை மறைக்கவும், ஒப்பந்ததாரர் மீது தவறு ஏற்படாமல் இருப்பதற்காகவும், லாரி உரிமையாளரிடம் கடிதம் பெற்று மேயர் ராமநாதன் பேசி வருவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தஞ்சை அருங்காட்சியகத்தில் 'மியூசிக்கல் டான்ஸ் பவுண்டைன்'