தஞ்சாவூர்: நெய்வேலி என்எல்சி நிலக்கரி நிறுவன விரிவாக்க பணிகளுக்காக சாகுபடி விளை நிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்தும், இதற்காக அங்கு குவிக்கப்பட்டுள்ள போலீசாரை அங்கிருந்து திரும்பப் பெறக் கோரியும், முழக்கங்கள் எழுப்பியபடி, கட்சி கொடிகளுடன் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என 50க்கும் மேற்பட்டோர் பாமக கொடியுடன் ஊர்வலமாக கும்பகோணம் - சென்னை நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு உழவர் பேரியக்க மாநிலத் தலைவர் கோ.ஆலயமணி தலைமை தாங்கினார். தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் ஜோதிராஜ் மற்றும் மாவட்டத் தலைவர் அமிர்தகண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருப்பனந்தாள் போலீசார், அவர்கள் அனைவரையும் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 45 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ்நாடு ஆளுநர் நமக்காக பிரச்சாரம் செய்கிறார் - முதலமைச்சர் ஸ்டாலின்
நெய்வேலி என்எல்சி விவசாய நிலங்களை கையகப்படுதுவது குறித்து பொதுமக்கள், அரசியல் கட்சிகள், விவசாயிகள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அரசு அதிகாரிகள் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சில இடங்களில் சுமூக முடிவு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று (ஜூலை 26) சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி நிறுவனம் வடிகால் வாய்க்கால் வெட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த கிராமத்தில் வடிகால் வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அந்த வாய்க்கால் பணியை தொடர்வதற்காக விலை நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் வெட்டும் பணியைத் துவக்கி நடத்தி வருகிறது.
மேலும், இது குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கூறியதாவது, 'என்எல்சி நிறுவனம் தற்பொழுது கையகப்படுத்தும் நிலத்திற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுத்து விட்டதாக தெரிவித்தார். அந்நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு முன்பே பணம் கொடுக்கும் போதே அதனை கையகப்படுத்திருந்தால் இந்த பிரச்னை ஏற்பட்டிருக்காது. அந்த நிலம் விவசாயிகளிடமே இருந்ததுதான் தற்போதைய பிரச்னைகளுக்கு காரணம் என்றார்.
இதையும் படிங்க: பிகாரில் மின் தடையை கண்டித்து போராட்டம் - போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு!