தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் பகுதியில் துப்பாக்கி புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலில் பேரில், கடந்த மார்ச் 19ஆம் தேதி, அப்பகுதியைச் சேர்ந்த மூன்று பேரை, குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 5 ஏர்கன் வகைகள், ஒரு ரிவால்வர், 2 பெல்ட் ரிவால்வர் என 8 துப்பாக்கிகளும், 67 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் ஆயுத பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி, நீதிமன்றத்தில் ஒப்படைக்க துப்பாக்கிகளை என்ணிய போது, அதில் 0.22 பேபி ஷாட் ரிவால்வர், பிபி பெல்லட் ஏர்கன் என இரண்டு துப்பாக்கிகள் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து, மாயமான துப்பாக்கிகளை கண்டுபிடிக்க, தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்தனர்.
விசாரணையில் துப்பாக்கியை திருடியதாக, அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய, கடலுார் மாவட்டம் முட்லுாரைச் சேர்ந்த காவலர் தீபக் (26), அவரது நண்பர் வாசுதேவன்(23), ஆகிய இருவரையும் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து தஞ்சாவூர் சிறையில் அடைத்தனர்.