தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே செம்மங்குடியை அடுத்துள்ள கீரனூர் கிராமத்தில் பெயிண்டிங் காண்ராக்ட் தொழில் செய்யும் வீரமணி, அருணா தம்பதியினர், கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ப்பு பிராணிகளாக மணி என்ற நாய் மற்றும் டாமி என்ற ஆடு என இரண்டையுமே வளர்த்து வருகின்றனர்.
கடந்த ஒரு மாதம் முன்பு, டாமி என்ற ஆடு 3 குட்டிகளை ஈன்றது. அதே போல் மணி என்ற நாயும் 4 குட்டிகளை ஈன்றது. நாயும், ஆடும் ஈன்ற குட்டிகள் வீட்டில் உள்ள வீரமணி, அருணா தம்பதியினரின் மகன்களான ஸ்ரீசாந்த் (13), உதயசூர்யா (12) மற்றும் ஸ்ரீகிருஷ்ணா (8) ஆகிய மூவர் உள்ளனர்.
எதிர்பாராத விதமாக டாமி என்ற ஆடு ஒரே வாரத்தில் உயிரிழந்தது. இதனால், அதனுடைய 3 ஆட்டுக் குட்டிகளும் பால் குடிக்க முடியாமல் தவித்தது. புட்டி பால் அளித்த போதும் அதனை அவை பெரும்பாலான வேளைகளில் குடிக்க மறுத்து வந்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத சூழலில், நாய் மணி தனது குட்டிகளைப் போலவே பெரும் தன்மையோடும், அளவு கடந்த பாசத்தோடும், 3 ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுக்க தொடங்கியது. தற்போது, நாள்தோறும் தொடர்ந்து பால் கொடுத்து வருகிறது. இது காண்போரை பெரும் வியப்பில் ஆழ்த்தி வருவதுடன், பாசத்தில் மனிதர்களை மிஞ்சிட நாங்களும் உள்ளோம் என்பதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளது.
இதையும் படிங்க: நியோமேக்ஸ் மோசடி வழக்கில் பொருளாதார குற்றப்பிரிவின் விசாரணை போதுமானதாக இல்லை - நீதிமன்றம் அதிருப்தி