தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகராட்சியில் உள்ள ரயில் நிலையம் முதல் கரிக்காடு வரையிலான ரயில்வே பாதையை ஒட்டியுள்ள பகுதிகளில், அகல ரயில் பாதை பணிகளுக்காக ரயில்வே துறை, தனியார் நிலங்களைக் கையகப்படுத்தியது.
கையகப்படுத்தப்பட்ட தனியார் நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை ரயில்வே நிர்வாகம் தராமல் 2014ஆம் ஆண்டு முதல் இழுத்தடித்து வருகிறது. இந்த இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் ரயில்வே துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால், பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் தவறும்பட்சத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வோம் என அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, வருவாய் துறை அலுவலர்கள், பாதிக்கப்பட்டவர்கள், ரயில்வே துறை அலுவலர்களிடம் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இந்த பேச்சுவார்த்தையில் இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: பட்டா வழங்கிய இடத்தை தரக் கோரி ஆதிதிராவிட மக்கள் போராட்டம்!