தஞ்சாவூர்: தஞ்சாவூரில் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சாவூர் மண்டல நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மண்டல தலைவர் தப்ரே ஆலம் பாதுஷா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி தமிழ் மாநில தலைவர் நெல்லை முபாரக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எஸ்டிபிஐ கட்சியை தயார்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் மாநிலத் தலைவர் நிர்வாகிகளை சந்திக்கிற கிளை கட்டமைப்பு வரை புதிய பூத் கமிட்டிகளை உருவாக்கும் ஆலோசனைகளை வழங்கி ஒரு பூத் ஒரு கிளை என்கிற நிர்வாக கட்டமைப்புகளுக்கு தேர்தலுக்காக தயார்படுத்தி வருவதாகவும், இதன் அடிப்படையில் தஞ்சாவூர் மண்டல நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
ஒடிசாவில் நடைபெற்ற கோரமண்டல் ரயில் விபத்திற்கு காரணமான அதிகாரிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும், ரயில் விபத்துகளை தடுக்க உருவாக்கப்பட்டிருக்கிற 'கவாச்' (Kavach) என்ற அமைப்பு இல்லாததன் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது, எனவே இந்த விபத்திற்கு காரணமான அமைச்சர்கள் அதிகாரிகள் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் பிரச்சனையில் (Female wrestlers issue) பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் பதவி நீக்கம் செய்ய வேண்டும், என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிறைகளில் வாழும் 37 ஆயுள் சிறைவாசிகள் மற்றும் வீரப்பன் கூட்டாளிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மேலும், தஞ்சாவூர் மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் ஆகும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஏதாவது ஒரு வகையில் சட்டத்திற்கு புறம்பாக மத்திய அரசும், தனியார் நிறுவனமும் முயற்சி செய்து வருகிறது, இயற்கையை பாதிக்கக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி வரும் மாதத்தில் தஞ்சாவூர் டெல்டா மாவட்டத்தை இணைக்கும் வகையில் நடை பயணத்தை நடத்த உள்ளது என்றார்.
மத்திய அரசும், தமிழக அரசும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இயற்கையை சீரழிக்க எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க கூடாது என்றும், ஆட்சியாளர்களின் கைப்பாவையாக சிபிஐ, என்ஐஏ, ஐடி போன்றவை உள்ளன இந்த சட்டங்களினால் கைது செய்யப்பட்டு இருக்கிறவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அப்பாவி இளைஞர்கள் அதில் கைது செய்யப்படுவதை தமிழக அரசு தடுத்திட வேண்டும் என்றும் மத்திய அரசின் நோக்கமே சிறுபான்மை மக்களை எதிரியாக காட்டுவது தான் என்று குற்றம் சாட்டினார்.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மண்டலத்தை சேர்ந்த தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: Odisha train accident: முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு... 2 மாதங்களில் அறிக்கை?