தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் முன்னிலையில் 21ஆம் தேதி மாலை பூதலூர் வட்டம், புதுக்குடி ஊராட்சியில் விளிம்பு நிலை மக்களுக்குப் புதிய வீடுகளை கட்டி, செந்தமிழ் நகரம் திறந்து வைக்கப்பட்டது.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் படி தஞ்சாவூர் மாவட்டத்தில் செந்தமிழ் நகர் என்ற விளிம்பு நிலை மக்களுக்காக பட்டா வழங்கி வீடுகள் கட்டும் திட்டம் தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதுவரையில் மாவட்டம் முழுவதும் பத்து செந்தமிழ் நகர்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடங்கியது. முதல் கட்டமாக நகர்களுக்கான பட்டா கொடுப்பதற்கான தகுதியான இடங்களை நேரடி பேச்சுவார்த்தை மூலம் தனியாரிடமிருந்து பெறப்பட்டு அனைத்து அடிப்படை வசதிகளும் குறிப்பாக சுத்தமான குடிநீர், தரமான சாலை, கழிவுநீர் வசதி மற்றும் தெருவிளக்கு வசதிகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு மனையும் அளவீடு செய்யப்பட்டு, வீடு எல்லை கற்கள் நடப்பட்டு பட்டா வழங்குவது முதற்கட்டமாகும்.
இரண்டாவதாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் நல்ல தரமான வீடுகள் கட்டிக் கொடுப்பது இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். அனைத்து விளிம்பு நிலை மக்களுக்கும் நலத்திட்ட உதவிகள் சென்றடைய வேண்டும். குறிப்பாக சாதிச் சான்றிதழ், வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சென்றடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார்கள்.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் புதுக்குடியில் செந்தமிழ் நகர் என்கிற சிறப்புத் திட்டத்தின் கீழ், 40 சென்ட் நிலத்தை ஜனகராஜ் என்பவர் விளிம்பு நிலை மக்களுக்கு வழங்கியதன் பேரில், தமிழ்நாடு அரசின் வீடு கட்டும் திட்டத்தினை இணைத்து, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும், மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்தும் ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து, 13 நபர்களுக்கு வீடுகள் கட்டி அவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது’’ என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
முன்னதாக இவ்விழாவில் விளிம்பு நிலை மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஆடிப்பாடி மாவட்ட ஆட்சியரை தங்களது வீடுகளுக்கு அழைத்துச் சென்று வீடுகளை திறக்க வைத்தனர். அப்போது மாவட்ட ஆட்சியருக்கு வீடுகள்தோறும் ப்ளக்ஸ் பேனர் வைத்து வீட்டின் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக கொண்டாடினர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மரக் கன்றுகளையும் நட்டனர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றியக் குழுத் தலைவர் அரங்கநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பொற்செல்வி, ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தஞ்சை கள்ள மது விவகாரம்.. 2 பேர் கைது, 4 டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்!