கரூர் தொடர்வண்டி நிலையத்தில், பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகளை, கரூர் குழந்தைகள் நல அமைப்பினர் (சைல்டு லைன்) மீட்டனர். அந்தக் குழந்தைகளை பரமேஸ்வரி என்ற பெண் தன்னுடைய குழந்தைகள் எனவும் தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் குழந்தைகள், அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்கவில்லை. அந்தக் குழந்தைகளிடம், குழந்தைகள் நல அமைப்பினர் விசாரணை நடத்தியதில், தங்களின் ஊர் தஞ்சாவூர் எனக் கூறியுள்ளனர்.
இதையடுத்து நான்கு குழந்தைகளும் தஞ்சையில் உள்ள குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர், அந்தக் குழந்தைகளிடம் அவ்வமைப்புக் குழுத் தலைவர் திலகவதியுடன் சேர்ந்து அமைப்பின் சில முக்கிய உறுப்பினர்களும் விசாரித்துள்ளனர்.
அப்போது நான்கு குழந்தைகளும் மதுரையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதையடுத்து மதுரையில் உள்ள குழந்தைகளின் தந்தையான கோச்சடை என்பவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தஞ்சை வந்து, உரிய ஆவணங்களைக் காண்பித்த பிறகு, குழந்தைகளை தன்னுடன் அழைத்துச் சென்றார். இதில் மூன்று குழந்தைகளை மட்டும் அழைத்துச் சென்ற அவர், நான்காவதாக இருந்த குழந்தையை தனக்கு யார் என்று தெரியாது என்று கூறியுள்ளார்.
இது குறித்து விசாரித்தபோது, கோச்சடையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அவருடைய மனைவி பரமேஸ்வரி மூன்று குழந்தைகளையும் பொள்ளாச்சி அழைத்துச் சென்றுள்ளார். அங்குப் பேருந்து நிலையத்தில், அழுதுகொண்டிருந்த, இன்னொரு ஆண் குழந்தையான ஐந்து வயதான தருணையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு, கரூர் தொடர்வண்டி நிலையம் வந்துள்ளார்.
அங்கு நான்கு குழந்தைகளையும் பிச்சை எடுக்கப் பயன்படுத்தியபோது, குழந்தைகள் நல அமைப்பினரால் மீட்கப்பட்டது தெரியவந்தது. தற்போது ஐந்து வயதுடைய தருண் மட்டும் தஞ்சை குழந்தைகள் நலக் குழுவின் அரவணைப்பில் உள்ளார்.
அவன் தனது தந்தை பெயர் சுரேஷ் என்றும் தாய் சித்ரா என்றும் தன்னுடைய தம்பி ராகவா என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த ஊர் என்பது தருணுக்கு சரியாகச் சொல்லத் தெரியவில்லை. இது குறித்து யாரும் தகவல் தெரிந்தால், தஞ்சையிலுள்ள குழந்தைகள் நல அமைப்பினரிடம் தகவல் தெரிவிக்குமாறு திலகவதி கேட்டுக் கொண்டுள்ளார்.