தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள அண்டமி மோகூர் கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை ஐ. பெரியசாமி தலைமையிலான ஏழு அமைச்சர்கள் குழு பார்வையிட்டது.
அப்போது பேசிய ஐ. பெரியசாமி, "தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. தலைநகர் சென்னையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்து பணிகளைத் துரிதப்படுத்திவருகிறார்.
3700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நாசம்
அவரே களத்தில் இறங்கிப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிவருகிறார். முதலமைச்சர் உத்தரவின் பெயரில் இன்று (நவ. 12) நாங்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வுசெய்தோம்.
மதுக்கூர் வட்டாரத்தில் தொடர் மழையால் 3700 ஹெக்டேர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கிப் பாதிக்கப்பட்டுள்ளன. சேத விவரங்கள் குறித்து எடுத்த கணக்கு விவரத்தை முதலமைச்சரிடம் கொடுக்கவுள்ளோம்.
வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வடியவைப்பதற்கான நடவடிக்கைகளை வேளாண் துறை அலுவலர்கள் மூலம் மேற்கொண்டுள்ளோம். மழை குறையும்பட்சத்தில் விரைவில் தண்ணீர் வடிந்துவிடும்.
கால்நடைகளுக்குத் தடுப்பூசி
கால்நடைகளுக்குக் கோமாரி நோய் பரவாமல் தடுப்பதற்காகத் தடுப்பூசி செலுத்தும் பணி முழுவீச்சில் நடந்துவருகிறது. இதேபோல் வேளாண் பணிகளுக்குத் தங்குதடையின்றி யூரியா உள்ளிட்ட எந்த வகை உரங்களும் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் உரங்களும் விநியோகம் செய்யப்பட்டுவருகின்றன. நாளை (நவ. 13) தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வுசெய்வதற்காக மு.க. ஸ்டாலின் வரவுள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் தலைமையில் அவசர ஆலோசனை: அமைச்சர்கள் அடங்கிய குழு