தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை, ஒரத்தநாடு, தொண்டராம்பட்டு, வாண்டையார் இருப்பு, தெக்கூர், ராவுசாப்பட்டி ஆகிய இடங்களில் மருத்துவத் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்ட புதிய துணை சுகாதார நிலைய கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம், சித்த மருத்துவ பிரிவு கட்டடம், ஹோமியோபதி மருத்துவ பிரிவு கட்டடம், என மொத்தம் 1 கோடியே 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான 6 மருத்துவ கட்டடங்களை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூலை 30) திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் மக்களைத் தேடி மருத்துவம் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள், தமிழ்நாடு முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. இதில் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 1021 மருத்துவர்களும், 983 மருந்தாளுனர்களும், 1066 சுகாதார ஆய்வாளர்களும், பணியில் அமர்த்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்கான தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன.
மருத்துவ பணியிடங்களை பொறுத்தவரை தேர்வு செய்யும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வாரமே பணி ஆணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள், அந்த மருத்துவர்களின் கோரிக்கையை, தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மேலும், மிக விரைவில் மருத்துவ பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அங்கு ரூபாய் 10 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணி ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அந்த மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர்கள் தங்குவதற்காக “காத்திருப்போர் கட்டடம்” நகராட்சி சார்பில் ரூபாய் 25 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு இருந்தது. அந்தக் கட்டடம் இன்றைக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றும், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஒப்பளிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் எண்ணிக்கை 24 அங்கு 24 மருத்துவர்களும் பணியில் இருந்தனர். இவ்வாறு ஒரு சில மருத்துவமனைகளில் 100 சதவீதம் மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்கள் என்றார்.
ஒரு சில இடங்களில் குறைகளும் உள்ளன அதை நிவர்த்தி செய்யத்தான் மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும், 983 மருந்தாளுனர் பதவி இடங்களுக்கு 43 ஆயிரம் பேர் தேர்வு எழுதியுள்ளனர் அவர்களை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றும், மேலும், PG கவுன்சிலிங் தொடங்கியுள்ளது அதற்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், அண்ணாதுரை, துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட மருத்துவத்துறை அரசு அலுவலர்கள், டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:17 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வுக்கு முற்றுப்புள்ளி: ஓய்வை அறிவித்தார் ஸ்டூவர்ட் பிராட்!