தமிழ்நாட்டில் உள்ள பழங்கால வீடுகள், அரண்மனைகள், செங்கலால் கட்டப்பட்டு அதன் மேல் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டிருக்கும். சுண்ணாம்புடன் மண்கலந்து கருங்கல் சக்கரத்தில் வைத்து அரைத்து அதனை சில நாட்கள் புளிக்கவைத்து பின்னர் அதனை எடுத்து பூச்சு பூசுவது தமிழர்களின் கட்டடக்கலையில் நுட்பத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு சுண்ணாம்பு அரைக்க பயன்படுத்தப்பட்ட கருங்கல் சக்கரமானது தஞ்சாவூர் ராணி வாய்க்கால் சந்து கழிவுநீர் செல்லும் பகுதியில் வெகு ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்துள்ளது. சுமார் 500 கிலோ எடை கொண்ட இந்தக் கருங்கல் சக்கரத்தை தொல்லியல் துறையினர் மீட்டு தஞ்சை தர்பார் மஹாலில் காட்சிப்பொருளாக வைத்துள்ளனர்.
இதனை பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.