தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் கருட சேவை புறப்பாடு மற்றும் அதனைத் தொடர்ந்து மறுநாள் நவநீத சேவை (வெண்ணெய் தாழி உற்சவம்) நடைபெற்று வருகிறது. அதேபோல் இந்த ஆண்டும் 89வது ஆண்டாக கருட சேவை விழா 8ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த விழாவில் முதல் நாளான 8ஆம் தேதி அன்று வெண்ணாற்றங்கரை பகுதியில் இருந்து ஸ்ரீ நரசிம்ம பெருமாள் சன்னதியில் திவ்ய தேசப் பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நடைபெற்று, கருட சேவை விழா தொடங்கியது. மறுநாள் 24 பெருமாள்கள் கருட சேவை புறப்பாடு ஜுன் 9ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று (ஜீன் 10) 15 பெருமாள் நவநீத சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை பகுதியிலிருந்து திவ்யதேச பெருமாள்களுடன் பல்லக்குகளில் புறப்பட்டு மங்கல வாத்தியங்கள் இசைக்க ஸ்ரீ நீலமேகப் பெருமாள், ஸ்ரீ நரசிம்ம பெருமாள், ஸ்ரீ மணிகுன்னப் பெருமாள், ஸ்ரீ கல்யாண வெங்கடேச பெருமாள், ஸ்ரீ யாதவ கண்ணன், ஸ்ரீ ரெங்கநாத பெருமாள், ஸ்ரீ கோதண்டராமர், ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள், ஸ்ரீ வரதராஜ பெருமாள் உள்ளிட்ட தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் உள்ள 15 பெருமாள் கோயில்களிலிருந்து வெண்ணெய் குடத்துடன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்குகளில் பெருமாள்கள் முன் அலங்கார சேவை மற்றும் சுவாமியின் பின் அலங்கார சேவை புறப்பட்டு தஞ்சை நகரின் முக்கிய ராஜ வீதிகளான கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி ஆகிய தேரோடும் ராஜ வீதிகளில் ஒன்றன் பின் ஒன்றாக உலா வந்து அருள்பாலித்தனர்.
இந்த வெண்ணெய்தாழி உற்சவத்தில் பஜனை பாடல்களை பாடியும், ஆடியும் பக்தர்கள் சென்றனர். மேலும், ராஜ ராஜ சமய சங்கத்தில் இரண்டு நாட்கள் திருவாய்மொழி நிகழ்ச்சியும் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து இன்று (ஜூன் 11) விடையாற்றி உற்சவம் நடைபெற்று விழா நிறைவு பெறும். இந்த நவநீத சேவையை ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் வணங்கி சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதிக்கு அடுத்தபடியாக 24 பெருமாள் கருடசேவை மற்றும் 15 நவநீத சேவை வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். தஞ்சாவூரில் வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆந்திரா, தெலங்கானா. கர்நாடகா மற்றும் வெளியூர்களில் இருந்தும் தருமபுரி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருச்சி ஸ்ரீரங்கம், திருப்பதி உள்ளிட்ட மற்ற ஊர்களில் இருந்தும் சேவகர்கள் ராமானுஜர் பற்றி வழிபடுபவர்கள், கிருஷ்ணர் வேஷம் இட்டும், பெருமாள் துதி பாடியும் விழாவில் கலந்து கொண்டனர். மேலும், ராமானுஜ தர்சன சபா சார்பாக ராஜராஜ சமய சங்கத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ராஜ கோபுரத்தில் ரஜினி, கமல், நயன்தாரா சிலைகளா? - இது மலேசியன் ஸ்டைல்!!