தஞ்சை மாவட்ட கடற்கரைப்பகுதி, தம்பிக்கோட்டை முதல் கட்டுமாவடி வரையில் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள 37 மீன்பிடித் தளங்களில் 1200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவருகின்றன. இங்கு மீன்பிடித் தொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
கடந்த 15ஆம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடைவிதிக்கப்பட்டு நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதிராம்பட்டினம் பகுதியில் கரையூர் தெரு, காந்தி நகர், ஆறுமுக கிட்டங்கி தெரு ஆகிய மீனவர் கிராமங்களில் மீனவர்களுக்கு மட்டும் மீன்பிடிக்கச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு மற்ற கிராமங்களைச் சேர்ந்த அனைத்து நாட்டுப்படகு மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்ல மீன்வளத் துறையினர் அனுமதி அளித்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மீன்வளத் துறை அலுவலர்களிடம் கேட்டபோது, "அதிராம்பட்டினம் பேரூராட்சிப் பகுதியில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதி மீனவர்களை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதிக்கவில்லை" எனக் கூறுகின்றனர்.
இது குறித்து அப்பகுதி மீனவர்கள், "இத்தொற்று இருக்கும் இடத்திலிருந்து எங்களது கிராமம் ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நோய்த்தொற்று இருக்கும் பகுதியிலிருந்து மிக அருகிலுள்ள கிராமங்களுக்கு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு எங்களை அலுவலர்கள் வேண்டுமென்றே பழிவாங்குகின்றனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மீன்பிடிக்கச் செல்லாமல், எங்களது குடும்பங்கள் வறுமையில் வாடி பட்டினியில் தவிக்கிறது. நாங்கள் கடற்கரையோரம் வசித்துவருகிறோம் கடலில் குறிப்பிட்ட நபர்கள் மட்டும்தான் மீன்பிடிக்கச் செல்கின்றோம். அப்படியே மீன்பிடிக்க கடலுக்குச் சென்றாலும் மீன்பிடித்து விட்டு வரும்போது துறைமுகத்திலேயே அந்த மீன்களை விற்பனை செய்துவிட்டுவருகிறோம்.
இதனால் எந்தவிதப் பாதிப்பும் இருக்க வாய்ப்பில்லை. எனவே உடனடியாக அரசு தலையிட்டு மூன்று கிராம மீனவர்களை மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க வேண்டும். மேலும் வறுமையில் வாடும் 3 ஆயிரத்து 500 குடும்பங்களை அரசு காக்க வேண்டும் என உருக்கத்துடன்" தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:மீன்பிடித் தடைக்காலம் - மீனவர்கள் நிவாரணம் கேட்டு அரசுக்கு கோரிக்கை