தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது நெல் அறுவடையும் கொள்முதல் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனர் சுதாதேவி, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "அக்டோபர் ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் 30ஆம் தேதி வரையில் 17 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல், ஏப்ரல் மாதத்திலிருந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் 23 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் என மொத்தம் 40 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு வைத்து பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறுவையில் தற்போது 77 விழுக்காடு வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இன்னும் 90 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. ஆயிரம் மூட்டைகளுக்கு மேல் வரத்து உள்ள 25 இடங்களில், கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது தொடர் மழைபெய்து வருவதால் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டிலிருந்து 22 விழுக்காடாக உயர்த்த மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இதனை ஆய்வு செய்ய மத்தியக் குழு நாளை தமிழ்நாடு வர உள்ளது. மேலும் இக்குழு நாளை மறுநாள் (அக்.24) முதல் தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்ய உள்ளது” என்றார்.