தஞ்சாவூர்: சாலியமங்கலம் அருகே பூண்டி தோப்பு பகுதியை சேர்ந்த எம்.காம் பட்டதாரியான இளைஞர் ஒருவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் சுற்றுச்சூழல் துறையில் பிஎச்டி படித்து வருகிறார். இந்த நிலையில் டெல்லியில் இருந்து சிபிஐ துணை போலீஸ் சூப்பிரண்டு சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 பேர் கொண்ட குழுவினர் கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டிற்கு சென்று திடீர் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து தஞ்சையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவன வளாகத்தில் இவரிம் கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தப்பட்டது. பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறாக இமெயில் அனுப்பியதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்திவருவதாக கூறப்பட்டது. இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக இவர் சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் வெள்ளிக்கிழமை அன்று அவரை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவரை இரண்டு நாட்கள் சிறையில் அடைக்கவும், வரும் திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து உள்ளூர் போலீசார் கூறுகையில், ”இவர், பிரதமர் அலுவலகத்திற்கு அவதூறாக இமெயில் அனுப்பியதாக மட்டுமே கூறி சிபிஐ அதிகாரிகள் அவரை தனியாக வைத்து விசாரித்தனர். இந்த விசாரணை ரகசியமாக நடத்தப்பட்ட நிலையில், அந்த பிஎச்டி மாணவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுக்கு சிறுமிகளின் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது.
இதைத்தொடர்ந்து இண்டர்போல் போலீசார் இதுகுறித்து மத்திய அரசிடம் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியது. அதன்படி மத்திய அரசு இந்த விவகாரத்தை சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது. இதுதொடர்பான முதல் கட்ட தகவலில் இவரைப்போலவே நாட்டில் 21 மாநிலங்களில் சிறுமிகளின் ஆபாச படங்களை அனுப்புவது, பதிவிறக்கம் செய்யும் நடவடிக்கையில் பலர் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களையும் தேடும் பணியில் சிபிஐ ஈடுபட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.