தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகர திமுக சார்பில் நேற்று (ஜூலை 11) இரவு கலைஞர் நூற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் மாவட்ட திமுக பிரதிநிதி மொ.இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளர் சு.கல்யாணசுந்தரம் மற்றும் தொ.மு.ச.பொதுச் செயலாளர் மு.சண்முகம், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் செ.இராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ க.அன்பழகன், மாநகரச் செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான சு.ப.தமிழழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பலர் பங்கேற்றனர்.
இந்த பொதுக் கூட்டத்தில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தலைவர்களின் நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடும்போது, அவர்களின் ஆட்சி இருக்காது. ஆனால் கட்சியும், ஆட்சியும், ஒருசேர அவரது நூற்றாண்டு விழாவைக் கொண்டும் அற்புதமும், ஆச்சரியமும் கருணாநிதி என்ற மகத்தான தலைவர் ஒருவருக்குத்தான் கிடைக்கும்.
ஒவ்வொரு தலைவருக்கும் அடையாளமாக ஒன்று அல்லது இரண்டைத்தான் சொல்லலாம். ஆனால், கருணாநிதிக்கு எண்ணற்ற அடையாளங்களை பட்டியல் இட முடியும். சிறை சென்ற களப்போராளியாக, இலக்கியவாதியாக, ஆட்சி திறன் மிக்கவராய் திகழ்ந்து எண்ணற்ற அடையாளங்களைக் கொண்ட ஒப்பற்ற தலைவர். இது தனிமனிதனுக்கான விழா அல்ல, கருணாநிதி என்ற தத்துவத்திற்கான விழா.
இந்தி எதிர்ப்பு போராட்ட துவக்க காலமான 1937-1938-இல் இளைஞராக பங்கேற்றவர், பின்னர் இதே போராட்டம் 1965இல் உச்சம் தொட்டபோதும் போராட்ட களத்தில் நின்று சிறை சென்றவர் கருணாநிதி. பாரதியால் செய்ய முடியாததை செய்து காட்டியவர் கருணாநிதி. சீனம், கிரேக்கம், யூதர்களின் மொழி, சமஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட ஆறு மொழிகள் செம்மொழி அந்தஸ்து பெற்றது. பிற செம்மொழிகள் எல்லாம் அந்த அந்த மாநிலங்களால் பின்பற்றப்பட்டது. ஆனால் தமிழ் மட்டும்தான் மத்திய அரசிதழிலில் செம்மொழி என குறிப்பிட்டு ஆணை வழங்கப்பட்டது. அதற்கு காரணம், கருணாநிதி.
உச்ச நீதிமன்றமே பேனா நினைவுச் சின்னம் வைக்கலாம் என அனுமதியளித்துள்ள நிலையில், பலர் வைக்க கூடாது என எதிர்ப்பு குரல் கொடுத்து வருகின்றனர். கை ரிக்ஷாவை ஒழித்து சைக்கிள் ரிக்ஷாவாக மாற்றி உத்தரவிட்டது கருணாநிதியின் பேனா. ஊனமுற்றோரை மாற்றத்திறனாளி என அழைக்க வைத்து உத்தரவிட்டது கருணாநிதியின் பேனா. எனவே, அவருக்கு பேனா நினைவுச் சின்னம் வைப்பதில் தவறில்லை.
2022 நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் இன்றும் 49 ஆயிரம் கிராமங்களுக்கு மின் வசதியில்லை என பேசினார். ஆனால், தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி ஆட்சியில் அனைத்து கிராமங்களும் மின் வசதி பெற்றது. பெண்களுக்கு சொத்துரிமை கிடைக்க காரணமாக இருந்தவர் கருணாநிதி. தமிழ் கடவுள் வாழ்த்துப் பாடலான நீராடும் கடலுடுத்த பாடலை கொண்டு வந்தவர் கருணாநிதி.
2018ஆம் ஆண்டு வரை எந்த மாநிலமும் இலவச மின்சாரம் வழங்காத நிலையில், 1989ஆம் ஆண்டிலேயே இலவச மின்சாரம் தமிழ்நாட்டில் வழங்கியவர் கருணாநிதி. சமீபத்தில் பேசிய பிரதமர், பாட்னாவில் தனக்கு எதிராக ஊழல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளது என கிண்டலாக குறிப்பிட்டார்.
பல நாடுகளுக்கு பயணப்பட்ட பிரதமர் மோடி தன்னுடன், தன்னுடைய விமானத்திலேயே அதானியை அழைத்துச் சென்று, ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற பல நாடுகளில் அவரது தொழில் குறித்த ஒப்பந்தம் ஏற்படுத்த காரணமாக இருந்தார். அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க நிறுவனம் ஆய்வு செய்து இதன் வாயிலாக உலக அளவில் மிகப்பெரிய ஊழல் ரூ.18 லட்சம் கோடிக்கு நடந்துள்ளது என்று குற்றம் சாட்டியது.
மேலும், ஸ்டாக் மேனிப்புலேஷன், பிராடு அக்கவுட்ன்ஸ் என குற்றம் சாட்டியது. பங்குச் சந்தைகளில் அதன் விற்பனையை போலியாக அதிகரித்துக் காட்டி, கணக்குகளில் ஏமாற்றி இந்த ஊழல் நடைபெற்றுள்ளது என கூறியது. ஆனால், இதற்கு அதானி நிறுவனம் எந்தவித மறுப்பும் தெரிவிக்கவில்லை. உடன் சென்ற பிரதமர் மோடியும் இது குறித்து வாய் திறக்க மறுத்து வருகிறார்.
எனவே, நீங்கள் மௌனம் கலைந்து பேசும் வரை நீங்களும் ஒரு பிராடுதான். மணிப்பூரில் மத ரீதியிலாக, சாதிய ரீதியிலாக மக்களைத் தூண்டிவிட்டு வெறுப்பு அரசியலை பாஜக நடத்தி வருகிறது. இதன் காரணமாக அங்கு 250 தேவாலயங்கள் இடிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரூ.1000 கொடுக்க மனமில்லால் விதிமுறைகள் வரையறை: தமிழக அரசை சாடிய நெல்லை முபாரக்!