தென்காசி: செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இளைஞர் தமீம் (25). இவர், தனது நண்பருடன் நேற்று (செப்.10) குண்டாறு அணையின் மேல் பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிக்குச் சென்றுள்ளார். அப்போது, அதி வேகமாக வீசிய காற்றின் காரணமாக மரம் விழுந்ததில், குளிக்க சென்ற தமீம் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து, அவரது நண்பர்கள் தமீமை மீட்டு சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த செங்கோட்டை காவல் துறையினர், மருத்துவமனைக்குச் சென்று தமீமின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
ஏற்கனவே, குண்டாறு அணையின் மேல் பகுதியில் உள்ள தனியார் நீர்வீழ்ச்சிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதனடிப்படையில், தென்காசி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், குண்டாறு அணைக்கு மேல் பகுதிக்குச் செல்லும் வழித்தடத்தில் பெரிய அளவிலான கதவு அமைக்கப்பட்டது.
இருந்தபோதும், அதனை பொருட்படுத்தாமல் தடையை மீறி தனியார் நீர்வீழ்ச்சி உரிமையாளர்கள் சுற்றுலாப் பயணிகளை ஆபத்தான முறையில் அருவிக்கு அழைத்துச் சென்று வந்த நிலையில், தற்போது இந்த விபத்தானது நிகழ்ந்துள்ளது.
இந்த நிலையில், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகமும், காவல் துறையினரும் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு தனியார் நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்ல அனுமதித்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் செங்கோட்டை வாழ் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதையும் படிங்க: கூடுதலாக தயிர் பச்சடி கேட்டதால் ஆத்திரம்... வாடிக்கையாளர் அடித்துக் கொலை!