தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் நீர் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று (ஆக.23) மாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து குற்றாலம் பேரருவியில் அபாய அளவை கடந்து தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் அருவிக்கரை பகுதியில் காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி பெய்து வரும் மழையின் அளவு குறைந்ததால் அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து சற்று குறைந்தது. இதனையடுத்து குற்றாலம் பேரருவியில் சுற்றுலாப் பயணிகள் ஓரமாக நின்று குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல், பழைய குற்றால அருவியிலும் தண்ணீர் வரத்து குறைந்ததால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றாலம், தென்காசி, செங்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ச்சியான காலநிலை நிலவி வருகிறது.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தில் அசத்தும் எம்பிஏ பட்டதாரி